பதிவு செய்த நாள்
18
மார்
2015
10:03
உத்திரமேரூர்: தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள, திருமுக்கூடல், அப்பன் வெங்கடேச பெருமாள் கோவிலில், 13 கிலோ வெள்ளி பொ ருட்கள் மற்றும் உண்டியல் பணம் ஆகியவை திருடு போனது. உத்திரமேரூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட திருமுக்கூடல் பகுதியில் புகழ் பெற்ற அப்பன் வெங்கடேச பெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவில், மத்திய தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. நேற்று முன்தினம் பூஜை முடிந் ததும், இரவு 8:00 மணிக்கு, காவலாளி அதே பகுதியைச் சேர்ந்த சம்பத் என்பவர், கோவிலை பூட்டிக் கொண்டு, கோவில் அருகே உள்ள அறையில் துாங்கச் சென்றார். நேற்று காலை 7:00 மணிக்கு, கோவிலை சுற்றிலும் உள்ள புல் மற்றும் பூச்செடிகளுக்கு தண்ணீர் பாய்ச்ச, சம்பத், கோவில் பி ன்புறம் சென்றார். அப்போது, கோவிலின் மேல்தளத்தில் உள்ள கூண்டு பகுதியின் ஜன்னல் கம்பிகள் உடைக்கப்பட்டுள்ளதை பார்த்து, அப் பகுதிவாசிகளுக்கும், போலீசாருக்கும் தகவல் தெரிவித்தார்.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் முன்னிலையில், கோவில் திறக்கப்பட்டது. கோவிலின் உள்ளே அடுத்து இருந்த, 2 கதவுகளும் உடைக்கப்பட்டு இருந்தன. மேலும், அப்பன் வெங்கடேச பெருமாள் அணிகலன்களான வெள்ளிக்கவசம், தசாவதார மாலை, லட்சுமி டாலர், சங்கு – சக்கரம், அபயஹஸ்தம், இரண்டு வெள்ளி தட்டுகள், ஒரு குங்குமச்சிமிழ் உள்ளிட்ட 13 கிலோ எடையுள்ள வெள்ளி பொருட்கள் திருடு போனது தெரியவந்தது. மேலும், உண்டியல் உடைக்கப்பட்டு, அதில் இருந்த காணிக்கையும் திருடு போனது. தகவலறிந்து, செங்கல்பட்டு ஏ.எஸ்.பி., ஜோர்ஜி ஜோர்ஜ் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினார்.காஞ்சிபுரத்தில் இருந்து தடவியல் நிபுணர்கள் வந்து, தடயங்கள் சேகரித்தனர்.மோப்ப நாய் அஜய் வரவழைக்கப்பட்டது. அது, கோவிலை சுற்றிலும் ஓடி, பாலாற்று படுகை வழியாக, அப்பகுதி மேம்பாலம் வரை ஓடி நின்றது. இதுகுறித்து, காவலாளி சம்பத் அளித்த புகாரையடுத்து, போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தப்பியது என்ன?: கோவிலில் தொல்லியல் துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அப்போது, கோவிலுக்குள் இருந்த பெரிய அளவிலான உண்டியல் உடைக்கப்பட்டு, அதில் இருந்த பணம் திருடு போனது, தெரியவந்தது. ஆனாலும், உடைக்கப்பட்ட உண்டியலில், திருடர்கள் விட்டுப்போன காணிக்கை ஏராளமாக இருந்தது. கணக்கிடப்பட்டதில், 15,604 ரூபாய் இருந்தது. மற்றொரு உண்டியல் உடைக்கப்படாமல் அப்படியே இருந்தது. அதில், 21,701 ரூபாய் இருந்தது. பெருமாள் தலையில் அணிவிக்கப்பட்டிருந்த, 5 கிலோ வெள்ளி கிரீடமும், உற்சவ மூர்த்திகளும், அவற்றின் மீது சார்த்தப்பட்டிருந்த, ஒரு கிலோ வெள்ளி நகைகளும் திருடு போகவில்லை.