பதிவு செய்த நாள்
20
மார்
2015
11:03
ராசிபுரம்: திருமலை திருப்பதி ஏழுமலையான் கோவிலில், நாளை (மார்ச் 21) நடக்கும் தெலுங்கு வருட பிறப்பு உற்சவ திருவிழாவிற்கு, மலர் அனுப்புவதற்காக பூ கட்டும் விழா, ராசிபுரம் அகர மஹால் திருமண மண்டபத்தில் நடந்தது. கொங்கணாபுரம், திருமலை திருப்பதி ஸ்ரீமன் நாராயணா நித்ய புஷ்ப கைங்கர்ய சபா அறக்கட்டளை சார்பில், திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தெலுங்கு வருடப்பிறப்பு (யுகாதி) உற்சவ விழாவையொட்டி, கோவிலில் உள்ள தங்ககொடி மரம் மற்றும் உள் பிரகாரங்களை அலங்கரிக்க ராசிபுரம் அகரம் மஹாலில் பூ கட்டும் பணி நடக்கிறது. மல்லி, சாமந்தி, ரோஜா, மேரிகோல்ட், துளசி, அரளி, மருவு, தாமரை, சம்பங்கி உள்ளிட்ட நான்கு டன் வரை பூக்களும் மற்றும் கரும்பு, தென்னப்பாளை, தென்னங்குருத்து, பாக்கு குலை, இளநீர், மாங்காய் உள்ளிட்ட பொருட்களை அனுப்ப ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. திருச்செங்கோடு, சின்னசேலம், கொங்கணாபுரம், நாமகிரிப்பேட்டை, பட்டணம் மற்றும் ராசிபுரம் சுற்றியுள்ள பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பெண்கள் பூக்களை கொண்டு, மாலை மற்றும் தோரணமாக கட்டும் பணியில் ஈடுபட்டனர். திருப்பதி கோவில் ஊழியர்களுடன் இணைந்து, அறக்கட்டளை நிர்வாகிகள், பக்தர்கள் ஆகியோர் தங்க கொடி மரம் மற்றும் உள் பிரகாரங்களில் மாலைகளால் தோரணம் கட்டி அலங்கரிக்கும் பணியில் ஈடுபடவுள்ளனர்.