பதிவு செய்த நாள்
21
மார்
2015
11:03
திருக்கழுக்குன்றம்: திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் கோவில் மலை அடிவாரத்தில், நாத உபாசனை விழா, நேற்று முன்தினம் நடைபெற்றது. திருக்கழுக்குன்றத்தில் ரிக், யஜுர், சாம, அதர்வண வேதங்களால் உருவான வேத மலையின் மேல், திரிபுரசுந்தரி உடனுறை வேதகிரீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது.
இசை நிகழ்ச்சி: வேதங்களால் உருவான மலையின்மேல் சுவாமி அமர்ந்துள்ளதால், ஆண்டுதோறும் பங்குனி மாத சிவராத்திரியை முன்னிட்டு, மலையடிவாரத்தில் அமைந்துள்ள கோவிலில், தவில் மற்றும் நாதஸ்வர வித்வான்கள் இசை நிகழ்ச்சி நடத்துவது வழக்கம். இந்த ஆண்டு, நேற்று முன்தினம் மாலை 6:00 மணிக்கு, வேதகிரீஸ்வரர் கோவிலின் ஓதுவார் சொக்கலிங்கம் தேவாரப் பாடல்களை பாட, இசை நிகழ்ச்சி ஆரம்பிக்கப்பட்டது. வேதகிரீஸ்வரர் திரிபுரசுந்தரி அம்பாள் தம்பதி சமேதரராய் அலங்கரித்து, பூக்களால் அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பின்னர், சுவாமியின் முன், தவில் மற்றும் நாதஸ்வர இசை நிகழ்ச்சி, 10 மணி நேரம் தொடர்ந்து நடைபெற்றது. தவில் மற்றும் நாதஸ்வர கலைஞர்கள் ஒவ்வொரு குழுவாக, ஒரு மணி நேரத்திற்கு ஒரு குழுவினர் என, இசை நிகழ்ச்சியை நடத்தினர். நேற்று முன்தினம், இரவு 7:00 மணிக்கு துவங்கிய இசை நிகழ்ச்சி, நேற்று அதிகாலை 5:00 மணி வரை நடைபெற்றது.
ரசிப்பு: நிகழ்ச்சியில் சென்னை, விழுப்புரம், திருவள்ளூர், திருவண்ணாமலை உள்ளிட்ட பல மாவட்டங்களிலிருந்தும், காஞ்சிபுரம் மாவட்டத்தில் அனைத்து பகுதிகளையும் சேர்ந்த ஏராளமான கலைஞர்கள் கலந்து கொண்டனர். இசை நிகழ்ச்சியைக் காண இசைப் பிரியர்கள், பக்தர்கள் ஏராளமானோர் வந்திருந்தனர். இசைக் கலைஞர்கள் ஒருவருக்கொருவர் போட்டிபோட்டு வாசித்த நாதஸ்வர, தவில் இசை ஒலியை, பக்தர்கள் மெய்சிலிர்க்க கேட்டு ரசித்தனர்.