பதிவு செய்த நாள்
23
மார்
2015
12:03
கோவை : கோவை வெள்ளியங்கிரி மலைக்கு செல்ல, வனத்துறை சார்பில் அனுமதியளிக்கப்பட்டது. இதனால், பக்தர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். கோவை மேற்கு தொடர்ச்சி மலையின் ஒரு அங்கமாக இருப்பது வெள்ளியங்கிரி மலை. 6,000 அடி உயரம் கொண்ட இம்மலையில், சிவன் சுயம்பு வடிவில் இருப்பார். பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் உள்ளதால், மக்கள் அனைத்து நேரங்களிலும் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.ஆண்டுக்கு இரண்டு முதல் மூன்று மாதங்களுக்கு மட்டுமே செல்ல அனுமதி வழங்கப்படும். அதேபோல், இந்த ஆண்டு சித்ரா பவுர்ணமி சீசனை முன்னிட்டு, இன்று முதல் பக்தர்கள் வெள்ளியங்கிரி மலையேற அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனால், மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். வெள்ளியங்கிரி மலைப்பகுதியில் ஏராளமான வன விலங்குகள் இருப்பதால், அவற்றின் பாதுகாப்பை கருதி, மலைப்பகுதியில் பிளாஸ்டிக் பயன்படுத்தவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதை கண்காணிக்க, மலையடிவாரத்தில் சோதனைச்சாவடி அமைத்து, பக்தர்கள் முழுமையாக சோதனைக்கு உட்படுத்தப்பட்ட பின்னரே, மலையேற அனுமதிக்கப்படுவர்.கடந்த ஆண்டு சித்ரா பவுர்ணமி காலத்தில், கலை இயக்குனர் ஒருவர் வெள்ளியங்கரி மலையில் மாயமானார். இந்தாண்டு, இதுபோன்ற அசம்பாவிதங்கள் நடைபெறாமல் இருக்க, 70 வேட்டைத்தடுப்பு காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
பக்தர்கள் கூறுகையில்,ஆண்டு தோறும் ஏப்ரல் முதல் வாரத்திலிருந்துதான் மலையேற, அனுமதி வழங்கப்படும். ஆனால், இந்த ஆண்டு மார்ச் மாதம் இறுதியிலிருந்தே மலையேற அனுமதி வழங்கியுள்ளது மகிழ்ச்சியளிக்கிறது. ஆண்டு தோறும் வெள்ளியங்கிரி மலையேறி, சிவனை தரிசனம் செய்வது வழக்கம். ஆனால், ஒவ்வொரு முறையும் ஒரு புதுமையான அனுபவம் கிடைக்கிறது என்றனர். போளுவாம்பட்டி வனச்சரகர தினேஷ் கூறுகையில், போளுவாம்பட்டி வனச்சரகத்தின் முக்கியமான இடம் வெள்ளியங்கிரி மலை. சித்ரா பவுர்ணமி காலங்களில் மட்டுமே அனுமதியளிக்கப்படும். இவ்வாண்டு, பக்தர்களின் வேண்டுகோளுக்கு இணங்க, சற்று முன்னதாகவே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அடுத்த மாத இறுதி வரை பக்தர்கள் மலையேறலாம், என்றார்.