சபரிமலை: சபரிமலை நடை இன்று மாலை திறக்கிறது. பத்து நாள் பங்குனி உத்திர திருவிழா நாளை காலை கொடியேற்றத்துடன் துவங்குகிறது. பங்குனி பூஜை முடிந்து கடந்த 19ம் தேதி இரவு நடை அடைக்கப்பட்டது. பங்குனி உத்திர திருவிழாவுக்காக இன்று மாலை 5.30க்கு மேல்சாந்தி கிருஷ்ணதாஸ் நம்பூதிரி நடை திறந்து தீபம் ஏற்றுவார். தொடர்ந்து இன்று வேறு எந்த விசேஷ பூஜைகளும் கிடையாது. இரவு 10 மணிக்கு நடை அடைக்கப்படும். நாளை அதிகாலை 5 மணிக்கு நடை திறந்ததும், நிர்மால்ய தரிசனம் மற்றும் அபிஷேகங்களுக்கு பின்னர் நெய்யபிஷேகம் துவங்கும். 8.30 மணிக்கு நெய்யபிஷேகம் நிறுத்தப்படும். தொடர்ந்து கொடியேற்றத்துக்கான சடங்குகள் துவங்கும். 10 மணிக்கு மணிக்கு தந்திரி கண்டரரு ராஜீவரரு கொடியேற்றுவார். நாளை முதல் நாள் விழாவில் இருந்து ஏப்.,3 தேதி ஒன்பதாம் நாள் விழா வரை தினமும் இரவு 10 மணிக்கு ஸ்ரீபூதபலி எனும் நிகழ்ச்சி நடக்கும் இரண்டாம் நாள் விழாவில் இருந்து ஒன்பதாம் நாள் விழா வரை தினமும் பகல் 12.30 மணிக்கு உற்சவபலி நடைபெறும். ஒன்பதாம் நாள் நள்ளிரவில் சரங்குத்தியில் பள்ளிவேட்டை நடைபெறும். ஏப்.3 பம்பையில் ஆராட்டு நடக்கும்.