பரமேஸ்வரனாகிய சிவபெருமானின் அருள் பெற்று ஈஸ்வரன் என்ற பட்டத்தைப் பெற்றவர்கள் ஐவர். தம்முடைய செல்வராகிய விநாயகருக்கு சிவனார் வழங்கிய பட்டம் விக்னேஸ்வரன். சில கணங்களில் சிவனாரின் அணுக்கத் தொண்டராக விளங்கும் திருநந்திதேவருக்கு நந்தீஸ்வரர் என்ற பெயரும் உண்டு. அரக்கர்களில் அளவற்ற சிவ பக்தியால் இலங்கை வேந்தனாக விளங்கிய ராவணனுக்கு ராவணேஸ்வரன் என்றும் பெயர். சிவ பக்தராக விளங்கிய சிறுவனே சண்டீஸ்வரர் ஆனார். கிரகங்களில் ஈஸ்வரனுடைய பட்டம் பெற்றவர் சனீஸ்வரர். இவர் நவகிரகங்களில் ஒன்றாக உயர்ந்து ஏனைய எட்டுக் கிரகங்களையும் ஆட்டி வைக்கும் ஆற்றல் பெற்றவர். சனிபகவான் தீவிர சிவபக்தர். காசியில் சிவலிங்க பிரதிஷ்டை செய்து, அதன் பயனாக கிரக பதவியையும் அதிகாரமும் பெற்றவர். தனக்கு வேண்டியவர், வேண்டாதவர் என்றில்லாமல் அவரவர்க்குரிய கிரக பலனைத் தருபவர். தனக்கு வரம் கொடுத்த சிவபெருமானையே பற்றி திருவிளையாடல் செய்தவர்.
ஒரு சமயம் சனிபகவான் சிவபெருமானைத் தேடி கயிலாயம் சென்றார். சிவபெருமான், பார்வதியோடு அமர்ந்திருந்தார். தன்னைப் பற்றுவதற்காக சனிபகவான் வருவதை அறிந்த சிவபெருமான், சனியின் பிடியிலிருந்து தப்பிக்க எண்ணினார். தேவியிடம் நான் சிறிது காலம் தவம் செய்யப் போகிறேன் என்று கூறிவிட்டு, அவ்விடத்தைவிட்டு அகன்றார். கயிலை மலையில் இருந்த ஒரு குகைக்குள் புகுந்தார். குகை வாசலை பாறையால் அடைத்தார். உள்ளே சென்ற சிவபெருமான், சனி பகவானுக்கு அஞ்சி நிஷ்டையில் ஆழ்ந்தார். அப்படியே யோக சமாதியில் ஆழ்ந்துவிட்டார். ஏழரை ஆண்டுகள் ஆன பிறகே யோகநிலை கலைந்து எழுந்தார். சனி பகவான் பிடியிலிருந்து தப்பிவிட்ட மகிழ்ச்சியில் குகையில் பாறையை விலக்கிவிட்டு வெளியே வந்தார். குகை வாசலில் சனிபகவான் நின்று கொண்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியுற்றார்.
வாசலில் நின்ற சனிபகவான் சிவபெருமானை நோக்கி பிரபோ! என்னுடைய கடமை முடிந்துவிட்டது. தங்களிடம் விடை பெற்றுக் கொள்கிறேன் என்றார். அதைக் கேட்ட சிவபெருமான், உன் பிடியிலிருந்து தப்பிப்பதற்காகவே, குகைக்குள் சென்றேன் ஆனால் நீயோ உன் கடமை முடிந்தது என்கிறாய்.... எனக்கு ஒன்றுமே புரியவில்லையே என்றார். சனி பகவான் புன்னகையோடு சிவபெருமானை நோக்கி, ஐயனே! தங்களை அம்பிகையிடமிருந்து பிரித்து, இருளான இக்குகைக்குள் ஏழரை ஆண்டுகள் அடைந்து கிடக்கச் செய்தவன் அடியேன்தான். நான் தங்களைப் பிடித்திருக்க வேண்டிய காலம் முடிந்தது. சென்று வருகிறேன். விடை கொடுங்கள்! என்று கூறி பணிந்து நின்றார். சிவபெருமான் திகைத்துப் போனார். உடனே சனிபகவானை நோக்கி, இன்று முதல் சனீஸ்வரன் என்று உன்னை எல்லோரும் அழைப்பார்கள்! என்று கூறி ஆசிர்வதித்தார்.