பதிவு செய்த நாள்
20
மார்
2015
06:03
அறுகம்புல்லை தூர்வை என்பார்கள். அதை லட்சுமி சொரூபமாக பாவிக்கவேண்டுமென்று வேதம் உபதேசிக்கிறது. தூர்வையைப் புகழும் வகையில் வேதத்தில் பல மந்திரங்கள் உள்ளன. அறுகம்புல்லை தினமும் பகவானுக்கு அர்ப்பணித்தபிறகு தலையில் வைத்துக்கொள்வதால், கெட்ட கனவுகள் விலகி, நன்கு உறக்கம் வரும். துர்க்கையைத் தவிர மற்ற எல்லா தேவதைகளுக்கும் தூர்வையால் அர்ச்சனை செய்வது மிகவும் சிறந்தது. துர்க்கையை அறுகம்புல்லினால் அர்ச்சனை செய்யலாகாது. உலகிலுள்ள ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு சிறப்புண்டு. அவ்வகையில் தூர்வையை ஆராதிக்கும் தினம் பாத்ரபத (ஆவணி) மாதத்தின் சுக்லபட்ச அஷ்டமி. இதற்கு தூர்வாஷ்டமி என்று பெயர். இந்த தூர்வாஷ்டமி விரதத்தை எல்லாரும் கடைப்பிடிக்கலாம். குறிப்பாக பெண்கள் அவசியம் கடைப்பிடிக்க வேண்டும். இவ்விரதம் பெண்களுக்கென்றே விதிக்கப்பட்ட ஓர் உன்னதமான விரதமாகும்.
இவ்விரதத்தைக் கடைப்பிடிப்பதால் சகல சவுபாக்கியங்களும் ஏற்படும். நமது பாரத தேசத்தை வளமாக வைத்துக்கொள்வதற்கும்; எல்லா இடத்திலும் உணவு, நீர், ஆடை நிறைவாகக் கிடைப்பதற்கும்; நீண்ட ஆயுளுடைய புத்திமான்களான- வீரர்களான புத்திரர்களைப் பெறுவதற்கும்; நினைத்த காரியங்கள் நிறைவேறுவதற்கும் இந்த விரதத்தை அனுஷ்டிக்கவேண்டும். இந்த தூர்வாஷ்டமி விரத பூஜாவிதி பவிஷ்ய புராணத்திலும், மதனரத்னத்திலும் கூறப்பட்டுள்ளது. தூர்வாஷ்டமி அன்று காலை நித்ய கர்மாக்களை முடித்துக்கொண்டு, நித்ய பூஜையையும் செய்தபிறகு இவ்விரதத்தைச் செய்யவேண்டும். பூஜையறையை சுத்தம்செய்து கோலமிட்டு விளக்கேற்றி, சுத்தம் செய்யப்பட்ட பலகையின்மேல் கோலமிட்டு, சுத்தமான இடத்தில் விளைந்த அறுகம்புல்லைப் பறித்துவந்து அப்பலகையின்மேல் பரப்பி, அதன்மேல் சிவலிங்கம் (இருந்தால் விசேஷம்) அல்லது படம் ஏதாவது ஒன்றை வைத்துப் பூஜிக்க வேண்டும். பூஜைக்கு எல்லாவிதமான இலைகளையும் மலர்களையும் எடுத்துக் கொள்ளலாம். அவைகளில் அறுகு, வன்னி இலை இரண்டும் அவசியம் இருக்கவேண்டும். பலகையில் பரப்பப்பட்ட அறுகம்புல்லின் நுனிபாகம் நம்மைநோக்கி இருக்கவேண்டும். புல்லைப் பறிக்கும்போது கணுக்கணுவாகத்தான் பறிக்கவேண்டும். ஆரம்பத்திலிருக்கும் முனை மட்டும்தான் நுனி என்கிற அர்த்தமில்லை. இது கணுக்கணுவாக வளர்வதால், நுனியைப் பறித்தாலும் அடுத்த கணுவே நுனி என்கிற கணக்குதான். ஆகையால் எல்லாக் கணுவையும் பறித்து அர்ச்சனை செய்யலாம். பகவானை அபிஷேகம் செய்து, ஷோடசோபசாரப் பூஜைகளைச் செய்து, 108 நாமங்களால் (சிவ அஷ்டோத்திரம், தேவி அஷ்டோத்திரம்) வணங்கி, அறுகு மற்றும் வன்னி இலைகளால் அர்ச்சிக்க வேண்டும்.
சக்திக்குத் தகுந்தாற்போல் நைவேத்தியங்கள் செய்து பிரார்த்தனை செய்ய வேண்டும். பிறகு பரமேஸ்வரனுக்கு அட்சதை, சந்தனம் கலந்த தயிரால் அர்க்யம் தர வேண்டும். பிறகு அறுகம்புலை நமஸ்கரித்து பிரார்த்தனை செய்யவேண்டும். அதற்கான மந்திரம்-
த்வம் தூர்வேஸ்ம்ருத ஜன்மாஸி வந்திதாஸி ஸுராஸுரை:
ஸௌபாக்ய ஸந்ததிம் தேஹி ஸர்வகார்ய கரீபவ
யதாசாகாப்ரசாகாபி: விஸ்த்ரு தாஸி மஹுதலே
ததா மமாபி ஸந்தானம் தேஹி த்வம் அஜராமரம்
பூஜைக்குப் பிறகு அந்தணர்களுக்கும், சுவாசினிகளுக்கும் மங்கள திரவியங்கள் மற்றும் தட்சிணையளித்து விருந்தளிக்க வேண்டும். அன்றைய தினம் பூஜை முடிந்த பிறகு பத்தியமில்லாமல் ஒரு வேளை மட்டும் உணவருந்தலாம்.
தூர்வையை தினமும் தலையில் வைத்துக்கொள்வதற்கான மந்திரம்: ஆயுள் தீர்க்கம் அரோகஞ்ச வபு: ஸ்யாத் வஜ்ர ஸன்னிபம். இதன் பொருள், தீர்க்காயுள் கிடைக்க வேண்டும். சரீரமானது நோயற்றதாகவும் வஜ்ரம்போல் பலமுள்ளதாகவும் இருக்க வேண்டும் என்பது. அறுகம்புல்லானது பற்பல ஹோமங்களில் விதிக்கப்பட்டுள்ளது. ஹோமம் செய்த அறுகின் புகையை நுகர்ந்தால் பாசம், அபஸ்மாரம் முதலிய தீராத நோய்கள் குணமடையும். அப்புகையை நுகர்வதால் நன்கு பசியெடுக்கும். பல்வேறு நோய்களைத் தீர்க்கும் வல்லமை அறுகுக்கு உண்டு. அறுகம் புல்லானது ஐஸ்வர்யத்தை அளிக்கவல்லது. இந்த தூர்வாஷ்டமி விரதத்தை அனுஷ்டித்தால் சகலசவுபாக்கியங்களையும் பெற்று, சிறந்த பிள்ளை பாக்கியத்தை அடைந்து, நினைத்த காரியங்களிலும் வெற்றியடையலாம்.
தூர்வையைப் போற்றும் மந்தரிம்: தூர்ஸ்வப்னங்களை நாசம் செய்யும் தூர்வாதேவியே, உன்னை வணங்குகிறேன். உன்னைத் தொடுவதாலும் பகவானுக்கு உன்னை அர்ப்பணம் செய்வதாலும் எனது எல்லாப் பாவங்களும் நீங்கவேண்டும். நீ எவ்வாறு கணுக்கணுவாக வளர்கிறாயோ, அவ்விதமே நானும் படிப்படியாக வளர்ந்து சகல ச்ரேயஸ்களையும் அடைய வேண்டும். ஹே தேவியே! நீ நன்கு படர்ந்து வளர்வாயாக. உன்னை நான் பூஜிக்கிறேன். உன்னை என் தலையால் தாங்கிக் கொள்கிறேன். நீ என்னை எப்பொழுதும் காப்பாற்றுவாயாக.