பதிவு செய்த நாள்
30
மார்
2015
12:03
மஞ்சூர் : அன்னமலை முருகன் கோவிலில், 26ம் ஆண்டு காவடி பெரு விழா, ஏப்ரல் 14ம் தேதி நடக்க இருப்பதால் கோவில் பொலிவுப்படுத்தப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்தின் பழநி என்றழைக்கப்படும் அன்னமலை முருகன் கோவிலில், ஆண்டு தோறும் சித்திரை முதல் நாளான ஏப்ரல், 14ம் தேதி காவடி பெருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது. தமிழகம் உட்பட கேரள, கர்நாடகத்திலிருந்து ஏராளமான முருக பக்தர்கள் காவடி ஏந்தி, இங்கு வருவது வழக்கம்.நடப்பாண்டுக்கான, 26ம் ஆண்டு காவடி பெருவிழாயையொட்டி, கோவில் கோபுரங்கள் வர்ணம் பூசி பொலிவுப்படுத்தப்பட்டுள்ளது. வரும், 14ம் தேதி நடக்கும் விழாவில், பேரூர் ஆதீனம் மருதாசல அடிகள், காமாட்சி புரி ஆதீனம் சிவலிங்கேஸ்வர சுவாமிகள், அன்னமலை தண்டாயுத சுவாமி ஸ்தாபகர் குரு கிருஷ்ணாநந்தாஜி ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர். சாது, சன்னியாசிகளின் ஆன்மிக சொற்பொழிவு, மகாயாகம், 108 திராவிய யாகம், கோ பூஜை, அன்னதானம், ஆதிவாசிகள் மற்றும் படுகர் மக்களின் கலாச்சார கலை நிகழ்ச்சிகள் உட்பட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. விழாவையொட்டி போக்குவரத்து துறை சார்பில் காரமடை, குன்னுார், ஊட்டி, கோத்தகிரி பகுதிகளிலிருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது. விழா ஏற்பாடுகளை ஸ்தாபர் குரு கிருஷ்ணாநந்தாஜி தலைமையில், திருமுருக பக்தர்கள் பேரவை, கிருத்திகை மகளிர் சங்கம் மற்றும் விழா குழுவினர் செய்து வருகின்றனர்.