பதிவு செய்த நாள்
03
ஏப்
2015
02:04
ராசிபுரம் : சீராப்பள்ளி மாரியம்மன் கோவிலில், வரும், 7ம் தேதி சாட்டையடித் திருவிழா
நடக்கிறது.ராசிபுரம் அடுத்த சீராப்பள்ளி மாரியம்மன் கோவிலில், பங்குனி மாத சாட்டையடி திருவிழா, தீ குண்டம் விழா வெகுவிமரிசையாக கொண்டாடப்படும். இந்த ஆண்டு, கடந்த, 31ம் தேதி பூச்சாட்டுதலுடன் விழா துவங்கியது.
அதை தொடர்ந்து, நேற்று ஸ்வாமிக்கு சிறப்பு அபிஷேகமும், கம்பம் நடும் விழாவும் நடந்தது. தினமும் ஸ்வாமிக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடக்கிறது. வரும், 7ம் தேதி, அதிகாலை 5 மணிக்கு, பூவோடு எடுத்தல், சாட்டையடி விழா நடக்கிறது. காலை, 8 மணிக்கு, பால் குடம் ஊர்வலம், இரவு, 9 மணிக்கு, அம்மன் சக்தி அழைத்தல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடக்கிறது.
8ம் தேதி, காலை, 9 மணிக்கு, பொங்கல் வைத்தல், மாவிளக்கு பூஜை, குண்டம் விழா நடக்கிறது. சுற்று வட்டாரத்தை சேர்ந்த ஆண்கள், பெண்கள், சிறுவர்கள் என ஏராளமானோர் குண்டம் இறங்கி அம்மனுக்கு தங்கது நேர்த்திக்கடனை செலுத்துகின்றனர்.தொடர்ந்து, மாரியம்மன் ஸ்வாமி சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். 9ம் தேதி இரவு, 10 மணிக்கு, அம்மன் சத்தாபரணம், 11ம் தேதி மஞ்சள் நீராட்டு விழாவும் நடக்கிறது. ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் மற்றும் ஊர் மக்கள் செய்துள்ளனர்.