பதிவு செய்த நாள்
04
ஏப்
2015
12:04
காரைக்கால்: திருநள்ளார் தர்பாரண்யேஸ்வரர் கோவிலில், 80 லட்சம் ரூபாய் மதிப்பில், புதிதாக செய்யப்பட்டுள்ள மூன்று தேர்களின் வெள்ளோட்டம், நேற்று நடந்தது. காரைக்கால் அருகே, திருநள்ளாரில் அமைந்துள்ள தர்பாரண்யேஸ்வரர் கோவிலில், சனீஸ்வர பகவான் தனி சன்னிதி கொண்டுள்ளார். நவகிரக ஸ்தலங்களில், சனி பரிகார ஸ்தலமாக விளங்கும் திருநள்ளாருக்கு, நாடு முழுவதுமிருந்து பக்தர்கள் வருகின்றனர். தர்பாரண்யேஸ்வரர் கோவிலில், ஆண்டுதோறும் நடக்கும் பிரம்மோற்சவ விழா தேரோட்டம் பிரசித்திப் பெற்றது. விழாவில், இரண்டு தேர்களில் சுவாமி வீதியுலா நடந்து வந்தது. இந்நிலையில், விநாயகர், சுப்ரமணியர், சண்டிகேஸ்வரர் ஆகிய சுவாமிகளுக்கு புதிதாக, மூன்று தேர்கள் செய்ய, கோவில் நிர்வாகம் முடிவு செய்தது. இதற்காக, 80 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் துவங்கின. புதிய தேர்கள் செய்யும் பணி நிறைவடைந்து, நேற்று காலை, 8:40 மணிக்கு, மூன்று தேர்களின் வெள்ளோட்டம் நடந்தன. இதில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.