பதிவு செய்த நாள்
28
ஜூன்
2011
02:06
பூமியில் இருந்து விண்வெளியில் முதலில் சந்திரனின் ஓடுபாதையும், பிறகு புதன், சுக்கிரன், சூரியன், செவ்வாய் எனும் வரிசையில் ஓடுபாதைகளும் இருக்கும். ராசிச் சக்கரத்திலும், சுக்கிரனுக்கு முன்னும் பின்னுமான வீடுகளில், புதனும் செவ்வாயும் தென்படுவர். ரிஷபத்துக்குப் பொறுப்பான சுக்கிரனின் முன் வீட்டில் புதனும், பின் வீட்டில் செவ்வாயும் அதிபதியாக இருப்பர். துலாத்துக்கு அதிபதியான சுக்கிரனுக்கு முன் வீட்டில் செவ்வாயும், பின் வீட்டில் புதனும் இடம் மாறியிருப்பர். சுக்கிரன் உலக சுகங்கள் அனைத்தையும் நமக்கு வழங்குபவன். அவன் வலுவை இழந்தால், ஏழ்மையில் தள்ளுவான்; வலுப்பெற்றிருந்தாலோ செல்வத்தில் திளைக்கச் செய்து, சிந்தனையைத் திருப்பி, சிக்கலில் சிக்க வைத்து, நம்மைத் துயரத்தில் ஆழ்த்துவான். சுக்கிரன் அளவான வலுவுடன் இருந்தால், வளமான வாழ்வைத் தருவான் நமக்கு!
பக்கத்து வீட்டு புதன் - விவேகத்துடனும், மறுபக்கத்து வீட்டுச் செவ்வாய் - சுறுசுறுப்புடனும் நம்மை இயங்க வைப்பார்கள். புதனது சேர்க்கையால் விவேகமும் கலப்பதால், செல்வச் செருக்கின்றிச் செயல்படும் திறன் கிடைக்கும். செவ்வாயுடன் சேரும்போது, ரஜோ குணத்தின் சேர்க்கை நிகழ, தவறான சிந்தனை தலைதூக்கும்; மெத்தனம் வெளிப்படும்; துயரத்தைச் சந்திக்க நேரிடும். சூரியனுக்கும் சுக்கிரனுக்கும் பயண வேளையில் ஒற்றுமை உண்டு. இருவருக்கும் ஏறக்குறைய இரண்டு வீடுதான் இடைவெளி! அடிக்கடி சூரியனுடன் நெருங்கும் வேளை அதிகம் உண்டு என்பதால், சூரியனின் ஒளியில் மங்கி, செயல்படும் தகுதியை இழக்க நேரிடும். சூரியன், செவ்வாய், சனி, ராகு, கேது ஆகியோருடன் சேரும்போது, தனது தனித்தன்மையை இழந்துவிடுவான், சுக்கிரன். சேர்ந்த கிரகத்தின் செயல்பாடும் அவனில் கலப்பதால், மாறுபட்ட பலனையே தருவான். இன்பமும் துன்பமும் கலந்ததே வாழ்க்கை என்கிறான் காளிதாசன். இதற்கு, சுக்கிரனின் மாறுபட்ட அமைப்பே காரணம் ஏழை, செல்வந்தன் ஆகிய இந்த இரண்டு நிலையும் அவனால் ஏற்படுவதே!
மாறுபட்ட காலத்தில், விகிதாசாரப்படி செல்வத்தைத் தருவதால், ஏழ்மையும் செல்வச் செழிப்பும் என மாறி மாறி வருகிற நிலையைச் சந்திப்பவர்கள் இருக்கின்றனர். அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு ! சுக்கிரன் செல்வத்தில் மூழ்கடித்தால் விவேகம் குன்றும்; சிந்தனை திசை திரும்பும். சுக்கிரன் வலுவிழந்தால், விவேகம் முளைக்கும்; செல்வந்தனாவது கடினம். இந்தச் செல்வம், விவேகம் இரண்டும் ஒரு சேரக் கிடைப்பது அரிது ! அதாவது, கிடைத்ததைக் கொண்டு திருப்திப்பட வேண்டும் எனும் கருத்தை உணர்த்துகிறான், சுக்கிரன். அறிவும் செல்வமும் மாமியார் - மருமகளைப்போல.. ஒன்று சேராது ! லட்சுமியும் சரஸ்வதியும் மாமியார் - மருமகள்தான். இரண்டுபேரும் ஒத்துப் போகமாட்டார்கள். அறிவு இருப்பவரிடத்தில், செல்வத்தின் சேமிப்பு இருக்காது; செல்வம் மிகுந்தவனிடம் அறிவு மங்கும். இந்த இரண்டின் தாக்கம், இன்றைய விஞ்ஞான உலகிலும் உண்டு ! பொருளாதாரமும் விவேகமும் சம அளவில் இணையாது. வயதில் முதிர்ந்தவன், அறிவில் முதிர்ந்தவன், ஒழுக்கத்தில் முதிர்ந்தவன் ஆகிய அனைவரும் செல்வந்தனின் வீட்டு வாசலில், கைகட்டிச் சேவகம் செய்யக் காத்திருக்கின்றனர் என்கிறார், கவிஞர் ஒருவர் (ஞான விருத்தா; வயோவிருத்தா...) இன்றைக்கு, இந்தச் சூழலே அதிகம் காணப்படுகிறது.
அதாவது, செல்வமும் விவேகமும் சம வலிமையுடன் திகழ்கிற நிலையை ஜோதிடம் உருவாக்கவில்லை. புதன், கன்னியில் உச்சனாக இருப்பின், சுக்கிரன் உச்சம் பெறமாட்டான். சுக்கிரன் மீனத்தில் இருப்பின், உச்சம் பெற்றிருப்பான். புதன், அங்கே நீசனாகிவிடுவான். அதாவது, புதனுடன் மீனத்தில் சுக்கிரன் இருந்தால், புதனும்; புதனுடன் கன்னியில் இணைந்தால், சுக்கிரனும் நீசம் பெறுகின்றனர். அதாவது, இருவரும் முழு பலத்துடன் இணைவது, இயலாத ஒன்று. அறிவு வலுப்பெற்றால் செல்வம் முடங்கும். செல்வம் வலுப்பெற்றால் அறிவு முடங்கும் என்பதை காலத்தின் நியதியாக சுக்கிரன் வெளிப்படுத்துகிறான். இருவரது சேர்க்கை அவர்களின் இயல்புகளை இடமாறச் செய்யும். துஷ்டனின் சேர்க்கையில் நல்லவன் துஷ்டனாகலாம். நல்ல சேர்க்கையால் துஷ்டனும் நல்லவனாகலாம்! மீனத்தில் நீசனான புதனுக்கு உச்ச சுக்கிரனின் சேர்க்கையைப் பார்த்து, புதனுக்கு நீசபங்கம் வந்து, ராஜ யோகமாக மாறிவிட்டதாக... நற்பலனாக சித்தரித்து விளக்கமளிக்கும் ஜோதிடம். கன்னியில் நீச சுக்கிரனுக்கு உச்ச புதனது சேர்க்கையில் நீசபங்கம் வந்து, ராஜ யோகமாக மாறியதாகச் சித்திரிக்கும். உச்ச கிரக சேர்க்கையில், நீசம் வலுப்பெறும்; நீசக் கிரக சேர்க்கையில், உச்சம் தரம் தாழ்ந்து விடும் என்கிறது அது ! இந்த இரண்டு சேர்க்கையும் ஒன்றை இழந்து, மற்றொன்றை வழங்குமே தவிர, இரண்டையும், சமமாகச் சேர்த்து வழங்காது. இதை உயர்ந்த யோகமாகச் சொல்லும் ஜோதிடத்தின் கூற்றுக்கு ஆதாரம் தேட வேண்டியுள்ளது. ஆக, இருவரின் உச்ச நீசசேர்க்கையில், இருவரும் சம பலனை அளிக்கும் வாய்ப்பு இல்லை என்பதே உண்மை. எனவே, அறிவும் செல்வமும் ஒரே இடத்தில் முழுமையாக இருப்பது, அரிதாகி விடுகிறது. இருட்டும் வெளிச்சமும் ஒரே இடத்தில் இருப்பதில்லை.
களத்திரகாரகனாகவும் விவாககாரனாகவும் செயல்படுபவன். சிற்றின்பம், உலக சுகம், பாட்டு இசை, நாட்டியம் முதலான கலைகள், ஆடம்பரப் பொருட்களில் ஈர்ப்பு, புதிய பொருட்களின் மீதான ஆர்வம் ஆகிய அனைத்தையும் தரவல்லவன் சுக்கிரன்;. அழகிலும் அழகிய பொருட்களிலும் ஆர்வத்தைத் தூண்டிவிடுவான் அவன். கடகம் போன்ற ஜல ராசியில் இருந்து, அது லக்கினத்திலிருந்து களத்திர ஸ்தானமாக அமைந்தால், பலரிடம் சிற்றின்பத்தைத் தேடி அலையவைப்பான். அஷ்டமத்தில் வீற்றிருந்தால், தாம்பத்திய சுகத்துக்காக ஏங்க வைப்பான்; காலம் கடந்து தருவதுடன், முழுத் திருப்தியைத் தராமல் அலைக்கழிப்பான். இரண்டு பாப கிரகங்களுக்கு இடையே மாட்டிக்கொண்ட சுக்கிரன், வலிமையை இழந்த நிலையில் இருந்தால், அரைகுறையான தாம்பத்ய சுகத்தைத் தந்து, விரக்தியில் தள்ளுவான். சுக்கிரனுக்கு, 4லும் 8லும் பாப கிரகம் இருக்க.. சதுரச்ர தோஷத்தைச் சந்தித்த சுக்கிரன், களத்திர தோஷமாக மாறி, மனைவியை இழக்கச் செய்வான்.
விவாகத்துக்குக் காரகன், சுக்கிரன். காரகன் என்றால், நடைமுறைப்படுத்தவேண்டியவன் என்று அர்த்தம். அவன் நல்ல நிலையில் இருந்தால், உரிய தருணத்தில், தடங்கலின்றித் திருமணத்தை நடத்திவைப்பான். லக்னத்தில் இருந்து, 7-வது வீடு களத்திர ஸ்தானம். அங்கே, விவாக காரகனான சுக்கிரன் இருந்தால், களத்திர சுகத்தை பலவீனமாக்குவான். 7-ஆம் பாவமாக அமைந்த விருச்சிகத்தில் வீற்றிருக்கும் சுக்கிரன், வரம்பு மீறிய சிற்றின்பத்தைத் தேடச் செய்து, துயரத்தில் ஆழ்த்துவான். சூரியனுடன் இணைந்து, 9-வது இடத்தில் அமர்ந்தால், வெப்பத்தின் தாக்கத்தால் தாம்பத்திய ஈடுபாட்டை வெட்டிவிடுவான். பாப கிரகங்களுடன் இணைகிற சுக்கிரன், தனது இயல்பை வெளிப்படுத்த முடியாமல் தவிப்பான். மகர லக்னம், துலாத்தில் சுக்கிரன். துலாம் 10 ஆம் வீடு... அங்கே சுக்கிரன் அமர்ந்தாலும், அவனுக்கு கேந்திராதிபத்ய தோஷம் உண்டு. இந்தத் தோஷத்தை எட்டிய சுக்கிரன், வேலையில் இடையூறு விளைவித்து, பொருளாதாரப் பற்றாக் குறையை உண்டுபண்ணுவான். சுபக் கிரகங்களோடும். அவற்றின் பார்வை பட்டும், சுக்கிரன் வலுப் பெற்றிருந்தால், வாழ்நாள் முழுவதும் இன்பமயமாக வாழலாம். கும்பம், மகர லக்னங்களுக்கு சுக்கிரன் யோக காரகன், ஒரு கிரகம், கேந்திரத்துக்கும் த்ரிகோணத்துக்கும் அதிபதியாக இருந்தால், யோக காரகன். ஒரு கிரகம், கேந்திரத்துக்கும் த்ரிகோணத்துக்கும் அதிபதியாக இருந்தால், யோக காரகன் எனும் அந்தஸ்து உண்டு. சுக்கிரன் யோக காரகனாக மாறியதால், அவனுடன் சேர்ந்த கிரகங்கள் நற்பலனை அளிக்கும்விதமாக மாறிவிடுவர். பாபத்துடன் இணைந்த சுக்கிரன், பாப கிரகத்தின் தாக்கத்தால் தனது இயல்பை மாற்றி, சேர்ந்த கிரகத்தின் இயல்புக்குத் தக்கபடி பலன்களைத் தருவான். அப்போது, சுக்கிரனின் தன்னிச்சையாகப் பலனளிக்கும் சுதந்திரம் பறிக்கப்படுகிறது.
ஒரு பெண்ணின் ஜாதகத்தில் ஏழில் செவ்வாயும் சுக்கிரனும் இருப்பதாகக் கொள்வோம். செவ்வாய், தாம்பத்திய சுகத்தை அழிப்பவன். ஆனால் சுக்கிரனின் சேர்க்கையில் தன் இயல்பை மாற்றிக்கொண்டு பலனை அளிப்பான். இதேபோல், சுக்கிரனும் தனது இயல்பை மாற்றி செவ்வாயின் இயல்புடன் பலன் தருவான். அப்போது, இருவரிலும் இருவரின் இயல்பும் கலந்திருப்பதால், இழப்பையும் தராமல், சுகத்திலும் முழுமை கிடைக்காமல் அரைகுறை பலத்தையே தருகின்றனர். செவ்வாய் 7-ல் இருந்தால் வைதவ்யம்; செவ்வாயுடன் சுபக் கிரகம் சேர்ந்திருந்தால், வைதவ்யம் இல்லை. ஆனால் புனர்பூவாக மாறிவிடுவாள். அதாவது, ஆசைப்பட்டவனைத் துறந்து வேறொருவனை ஏற்பாள் எனப் பலனை மாற்றிச் செல்வதைக் கவனிக்க வேண்டும் (ஆக்னேயை; விதவாஸ்தகை: மிச்ரே புனர்பூ பவேத்). செவ்வாயால் ஏற்பட்ட தாம்பத்யத்தை இழக்கும் சூழலைச் சந்தித்தவளை வேறொருவருக்கு மனைவியாக மாற்றி, கறுப்புப் புள்ளியுடன் வாழ்க்கையைத் தொடரச் செய்வான், செவ்வாயுடன் இணைந்த சுக்கிரன். புனர் பூ எனும் திருப்புமுனை அவனால் உருவானது.
தசா வருஷத்தின் எண்ணிக்கை மற்ற கிரகங்களைவிட சுக்கிரனுக்கு அதிகம். 20 வருடங்கள் அவனது தசை நீடிக்கும். மூன்றாக வகுத்த தசா வருஷத்தில், 2-வது பகுதியில் தசா பலன்களை அள்ளித் தருவான். 2,7-க்கு உடையவனாக அங்கே வீற்றிருந்தால், அதாவது மாரகாதிபதி மாரகத்தில் இருந்தால், அழிவைச் சந்திக்க வைப்பான். இன்பத்தைக் கொடுத்துவிட்டு, திடீரென துன்பத்தில் தள்ளும்போதுதான், அது பொறுக்கமுடியாத துயரமாகிவிடுகிறது. அதை தனது இயல்பாகக் கொண்டிருக்கிறான் சுக்கிரன். ஆணில் உருப்பெறும் கடைசித் தாதுவுக்கு சுக்கிரம் எனப் பெயர் வைத்திருக்கிறது ஆயுர்வேதம். அதுதான் தாம்பத்திய சுகத்தின் அடிப்படை சிற்றின்பத்தை அளிப்பவனான சுக்கிரனுக்கு, இந்தப் பெயர் பொருத்தமே ! நல்லவன் சேர்க்கையில் இன்பம், கெட்டவன் சேர்க்கையில் துன்பம் என்பதற்கு சுக்கிரன் எடுத்துக்காட்டு. இளமையை இனிமையாக்குவதில் இவனுக்கு நிகர் எவரும் இல்லை. வம்ச விருத்திக்கு, வாழ்வில், நம்பிக்கையூட்ட சுக்கிரன் அவசியம். விண்வெளி ஓடு பாதையில் ஆத்மகாரகனான சூரியனுடன் நெருங்கிச் செல்வதால், தன்மானத்துடன் வாழச் செய்பவன் அவன். அறத்தை வளர்ப்பதிலும், இனத்தைப் பெருக்குவதிலும் திறமை பெற்றவன் என்று அவன் அமர்ந்த ரிஷப ராசி சுட்டிக்காட்டும் (தர்ம ஸ்த்வம் விருஷரூபேண).... சீர்தூக்கி ஆராய்ந்து முடிவு எடுப்பதில் முதன்மையானவன் என்பதை அவன் அமர்ந்துள்ள துலா ராசி சுட்டிக் காட்டும். அதாவது, கிராமச் சூழலிலும் (ரிஷப ராசி) நகரச் சூழலிலும் (துலாம்) மனம் ஒத்துப்போக வைப்பதில் திறமைகொண்டவன். மகிழ்ச்சிக்கு மனமே காரணம்; இடம் காரணமல்ல என விளக்குபவன் சுக்கிரன்.
சுக்கிர வழிபாட்டு முறையை வேதம் வகுத்துத் தந்திருக்கிறது. சுக்கிர சாந்தி என விரிவான வழிபாட்டை சாந்தி ரத்னாதரம் எனும் நூல் விளக்குகிறது. வெள்ளிக்கிழமை, அவனை வழிபட உகந்த நாள். சுக் சுக்ராயநம: என்று சொன்னால் அது மந்திரமாக மாறிவிடும் என மந்திர மஹோததி சொல்கிறது. இந்த மந்திரத்தை 108 முறை மனதுக்குள் சொல்லி வழிபடலாம். சுக்கிரனின் உருவத்தை சும் சுக்ராய நம : எனும் மந்திரத்தால், 16 உபசாரங்களை நடைமுறைப்படுத்தி வணங்குவது வளம் தரும். தினமும் அவசரத்துடன் வழிபடுவதை விட, வெள்ளிக்கிழமை தோறும் முழு ஈடுபாட்டுடன் சுக்கிரனை வணங்கி பலன் பெறலாம்.
பகவந்தம் கவிம் சுக்ரம் பிரணதார்த்தி வினாசகம்
ஸர்வகாம பிரதம் வந்தெ பரமானந்த தாயகம்
எனும் ஸ்லோகத்தைச் சொல்லியும் வணங்குங்கள்; வாழ்வு வளம் பெறும்.