பதிவு செய்த நாள்
09
ஏப்
2015
05:04
மகாதேவா, தேவாசுர யுத்தத்தில் தேவர்கள் தோல்வியடையும்படியான மந்திரங்களை எனக்கு உபதேசிக்க வேண்டும். ஆனால், அந்த மந்திரங்கள் பிரகஸ்பதி அறியாததாக இருக்க வேண்டும் என்று கோரினார் சுக்ராச்சாரியார். சிவபெருமான் சற்றே யோசித்து அதற்கு நீ ஆயிரம் ஆண்டுகள் தலைகீழாகத் தவம் செய்ய வேண்டும் என்றார். சம்மதித்த சுக்ராச்சாரியார், அசுரர்களிடம் நிலைமையை விளக்கி, நான் வரும்வரை பொறுமை காத்து தவசி வேடம் பூண்டு காலம் கழிக்க வேண்டும் என்று கூறிச் சென்றார். ஆனால், இந்திராதி தேவர்கள் அசுரர்களைப் கூண்டோடு அழிக்க இதுவே சமயம் எனப் போர் தொடுத்தனர். அசுரர்கள் பயந்து சுக்கிரரின் அன்னையும், பிருகு முனிவரின் மனைவியுமான கியாதியிடம் சரணடைந்தனர். அமரர்கள் பிருகுவின் இருப்பிடம் வந்து நிராயுதபாணிகளான அசுரர்களை நையப்புடைத்தனர். கியாதி தடுத்தும் அவர்கள் நிறுத்தவில்லை. கியாதி, நித்திரா தேவியை ஸ்தோத்தரிக்க, தேவர்கள் அப்படியே சரிந்து தூக்கத்திலாழ்ந்தனர், தேவர்கள் மகாவிஷ்ணுவை எண்ணி வணங்கினர். உடனே மகாவிஷ்ணு அங்கு தோன்றி, சுதர்சன சக்கரத்தை ஏவி கியாதியின் சிரத்தைத் துண்டித்தார். தேவர்கள் நித்திரை தெளிந்து எழுந்து பகவானை வணங்கினர்.
அப்போது வெளியிலிருந்து வந்த பிருகு முனிவர், மனைவியின் தலை துண்டாகியிருப்பதைக் கண்டு வெகுண்டார். ஸ்திரீ ஹத்தி செய்வது பாபம் என்பதை நீ அறியாதவனா? நீயும் உன் மனைவியைப் பிரிந்து காட்டில் திரிவாய். மண்ணுலகில் பெண் வயிற்றில் பிறக்கும் அவலமும் உண்டாகட்டும் என்று திருமலை சபித்தார். பிறகு மனைவியின் தலையை உடலோடு பொருத்தி நான் இதுவரை செய்த தவமும், தருமமும் பரமேஸ்வரருக்குத் திருப்தியைத் தந்திருக்குமானால் நீ பிழைத்தெழுவாய் எனக் கூறி வெட்டுப்பட்ட இடத்தில் கமண்டல நீரைத் தெளித்தார். கியாதி தூங்கி எழுவதுபோல் எழுந்தாள். இந்திரன், தவம்முடித்து சுக்கிரர் வந்தால் அவரும் சாபம் கொடுக்கக் கூடும் என அஞ்சி. தன் புதல்வி ஜெயந்தியை அழைத்து, சுக்கிரர் திருப்தியுறும்படி தொண்டாற்றி அவர் மனைவி என்ற அந்தஸ்தை அடைவாயாக என அனுப்பினான். ஜெயந்தியும் ஆபரணங்களை அகற்றி, மரவுரி தரித்து சுக்கிரர் தவம் செய்யுமிடம் வந்து, அவருக்கு வேண்டிய அனைத்துப் பணிவிடைகளையும் செய்தாள். தவக்காலம் பூர்த்தியாகி சிவபிரான் அவர்முன் தோன்றி மிருத சஞ்சீவினி போன்ற அரிய மந்திரங்களை அவருக்கு உபதேசித்து மறைந்தார். பிறகு, ஜெயந்தியிடம், அவள் யார்? இப்படிப் பணிவிடை செய்வதன் நோக்கம் என்ன? என்று விசாரித்தார் சுக்கிரர்.
ஜெயந்தியும் உண்மையைக் கூற, எவருமறியாமல் பத்து ஆண்டுகள் அவளோடு சந்தோஷமாக வாழ்ந்தார் அசுர குரு. இதை அறிந்த அமரர்கள் பிரகஸ்பதியிடம், சுக்கிரரே அவர்களை சபிக்கும்படி அசுரர்களை இந்த சமயம் உங்கள் வசப்படுத்திக்கொள்ள வேண்டும் என்று பிரார்த்தித்தனர். பிரகஸ்பதி சுக்கிரரைப் போல் உருமாறி அசுரர்களிடம் சென்று இனி தேவர்கள் உங்களை எக்காலத்திலும் ஜெயிக்க முடியாது. அதனால் வாழ்க்கையை உல்லாசமாக அனுபவியுங்கள் என்று போதித்தார். அசுரர்களும் யுத்தப் பயிற்சியின்றி, சிவபூஜை விடுத்த கேளிக்கைகளில் காலம் கழித்தார்கள். பத்தாண்டுகள் முடிந்து சுக்கிரர் அசுரர்களை நாடி வந்தார். இரண்டு சுக்கிரர்களில் யார் நிஜம் என்று தெரியாமல் உண்மையான சுக்கிரரை விரட்டியடித்தனர் அசுரர்கள். சுக்கிரர் சினந்து, தேவாசுரப் போரில் உங்களுக்குத் தோல்வியே கிட்டும் என சபித்தார். அப்படியே நடந்தது. பிரகஸ்பதி அமரர்களுடன் சேர்ந்துகொள்ள மகாபலி சக்கரவர்த்தி கழுதை வடிவெடுத்து பாதாளத்துக்கு ஓடினான். பிரகலாதன் போய் சுக்கிரரை சமாதானம் செய்து அழைத்து வந்தான்.