பதிவு செய்த நாள்
11
ஏப்
2015
12:04
கரூர்: கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில், வரும் சித்திரை ஒன்றாம் தேதியில் இருந்து,
நாள்தோறும் திருக்கல்யாணம் நடைபெற உள்ளது.கரூர் மாவட்டத்தில் உள்ள கல்யாண பசுபதீஸ்வரர் கோவில், பிரசித்தி பெற்ற கோவிலாகும். கோவிலில் பசுபதீஸ்வரர் சன்னிதி, அலங்காரவள்ளி, சவுந்திரவள்ளி சன்னதி நவக்கிரஹம், பைரவர் அடுத்தபடியாக சித்தர் கருவூரார் சன்னதியும் அமைந்துள்ளது. நாள்தோறும் பலஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனத்துக்கு வந்துசெல்கின்றனர்.
இக்கோவிலில் நாள்தோறும் திருக்கல்யாணம் நடத்த ஏற்பாடு செய்துள்ளனர். இதுகுறித்து கரூர் பசுபதீஸ்வரர் கோவில் செயல் அலுவலர் ராஜாராம், கூறியதாவது: வரும் சித்திரை 1ம் தேதி முதல், நாள்தோறும் கல்யாண பசுபதீஸ்வரருக்கு திருக்கல்யாணம் நடத்த ஏற்பாடு செய்துள்ளோம். பக்தர்கள் ஆயிரம் ரூபாய் செலுத்தினால், அவர்களது பெயரில் திருக்கல்யாணம் நடத்தப்படும்.
ஒன்றுக்கும் மேற்பட்டோர், ஒரே நாளில், பணம் செலுத்தினால் என்ன செய்வது என்று கோவில் நிர்வாக அதிகாரிகள் கூட்டம் நடத்தி முடிவு செய்யப்படும். ஏனென்றால் நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருவதால், அவர்களும் ஸ்வாமிக்கு திருக்கல்யாணம் நடத்த வேண்டும் என்று விரும்புவார்கள்.
திருக்கல்யாணத்தில் பங்கேற்பவர்களுக்கு பொங்கல், பூ, தேங்காய், பழம் போன்றவை பிரசாதமாக வழங்கப்படும். திருக்கல்யாணம் நாள்தோறும் காலை முதல், மதியம் வரை நடைபெறும். பக்தர்களின் ஒத்துழைப்பு இருந்தால், ஆண்டுமுழுவதும் திருக்கல்யாணம் நடத்த தயாராக உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.