பதிவு செய்த நாள்
11
ஏப்
2015
12:04
திருச்சி: ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில், சித்திரை தேர் திருவிழா, நேற்று துவங்கியது. வரும் 20ம் தேதி வரை, 11 நாட்கள் திருவிழா நடக்கிறது. முக்கிய நிகழ்வான தேரோட்டம், 18ம் தேதி நடக்கிறது.
ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் சித்திரை தேர் திருவிழா, நேற்று அதிகாலை 5.45 மணிக்கு,
கொடியேற்றத்துடன் துவங்கியது. காலை முதல், பகல் 12 மணி வரை கண்ணாடி அறையில் நம் பெருமாளுக்கு, சிறப்பு பூஜைகள் நடந்தது. இன்று, நம்பெருமாள் கண்ணாடி அறையில் இருந்து, பல்லக்கில் புறப்பாடும், கற்பகவிருஷ வாகனத்தில் சித்திரை வீதிகள் வலம் வருதல் நடக்கிறது. நாளை மூன்றாம் நாள், சிம்ம வாகனத்தில் நம்பெருமாள் வலம் வருகிறார். நான்காம் நாள் ஆஸ்தான மண்டபத்தில் இருந்து, தங்க கருட வாகனத்தில் புறப்பட்டு, நம்பெருமாள் சித்திரை வீதிகளில் வலம் வருகிறார்.
இதையடுத்து, அடுத்தடுத்த நாட்களில் சேஷ வாகனம், அனுமந்த் வாகனம், தங்க ஹம்ச வாகனம், யானை வாகனம், வெள்ளிக்குதிரை வாகனத்தில் நம்பெருமாள், சித்திரை வீதிகளில் வலம் வருகிறார்.விழாவின் ஒன்பதாம் நாளான 18ம் தேதியன்று, முக்கிய நிகழ்வான சித்திரை தேரோட்டம் நடக்கிறது.
அன்று அதிகாலை, 3.45 மணிக்கு நம்பெருமாள், கண்ணாடி அறையில் இருந்து, திருத்தேருக்கு
புறப்படுதல் நடக்கிறது. சித்திரை தேர் மண்டபத்தில் காலை 4.30 மணி முதல், 5.15 மணிக்குள் மீன லக்னத்தில் தேரில் எழுந்தருளல் நடக்கிறது. காலை 6 மணிக்கு, தேர் வடம் பிடித்து இழுக்கப்படுகிறது. பத்தாம் நாளான, 19ம் தேதியன்று சத்தாவரணமும், பதினோராம் நாளில் ஆளும் பல்லக்கில் நம்பெருமாள் புறப்பட்டு, சித்திரை வீதிகள் வலம் வந்து மூலஸ்தானம் சேர்தலும் நடக்கிறது.
சித்திரை தேர் திருவிழா நடக்கும் ஏப்ரல் 10ம் தேதி முதல், 20ம் தேதி முடிய, 11 நாட்களிலும், காலை விசுவரூப தரிசனம் கிடையாது என, கோவில் இணை ஆணையர் ஜெயராமன், தெரிவித்துள்ளார்.