பதிவு செய்த நாள்
25
ஏப்
2015
01:04
ராசிபுரம்,:ராசிபுரம் அடுத்த தண்ணிமாத்தி ஆண்டியப்பன், ரதி-மன்மதன், ஈஸ்வரன் கோவிலில், வரும், மே, 3ம் தேதி கும்பாபிஷேக விழா நடக்கிறது.ராசிபுரம் அடுத்த, கொல்லிமலை பைல்நாடு அருகே தண்ணிமாத்தியில் உள்ள ஆண்டியப்பன், ரதி - மன்மதன், ஈஸ்வரன் மற்றும் பதினென் சித்தர் பரிவார கோவில் உள்ளது. இக்கோவில், நூதன முறையில் திருப்பணிகள், கருவரை மற்றும் கோபுரம், ராஜகோபுரம் கட்டும் பணி இரண்டு ஆண்டுக்கு முன் துவங்கியது.
திப்பணிகள் முடிவடைந்ததை தொடர்ந்து, கும்பாபிஷேகம் செய்ய முடிவு செய்யப்பட்டது. விழாவை முன்னிட்டு, வரும், மே, 2ம் தேதி, மாலை, 3 மணிக்கு, செம்பியன் மாதேவி கோவிலில் இருந்து, தீர்த்தக்குடம் எடுத்து வரும் நிகழ்ச்சியுடன் விழா துவங்குகிறது.
தொடர்ந்து, மாலை, 4 மணிக்கு, கணபதி பூஜை, புண்ய யாகம், வாஸ்து பூஜை, ரக்ஷாபந்தனம், யாகசாலை பூஜை நடக்கிறது. இரவு, 9 மணிக்கு ரதி, மன்மதனுக்கு முதற்கால யாக வேள்வி, கோபுர கலசம் வைத்தல், ஸ்வாமி பிரதிஷ்டை, எண் வகை மருந்து சாற்றுதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடக்கிறது.
3ம் தேதி, அதிகாலை, 5 மணிக்கு, சோம பூஜை, நாடி சந்தானம், காலை, 7.30 மணிக்கு, கடம் புறப்பாடும், கோபுர கலசத்திற்கு புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்யப்படுகிறது. தொடர்ந்து, மூலவர் ஸ்வாமிக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடகந்கிறது. சிறப்பு அலங்காரத்தில் ஸ்வாமி பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார்.விழாவில், பங்கேற்கும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. இதற்கான ஏற்படுகளை கோவில் நிர்வாத்தினர், விழாக்குழுவினர் செய்துள்ளனர்.