பதிவு செய்த நாள்
27
ஏப்
2015
02:04
சென்னை : திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில் மண்டபத்தில், தரையில் பதிக்கப்பட்டிருந்த பழமையான கருங்கல் கற்களை பெயர்த்துவிட்டு, மார்பிள் கல் பதிக்கப்படுவது, பக்தர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. திருவல்லிக்கேணியில் அமைந்துள்ள பார்த்தசாரதி கோவில், எட்டாம் நுாற்றாண்டில் கட்டப்பட்டது; 108 திவ்ய தேசங்களில் முக்கியமானது. பல்லவ மன்னரான, முதலாம் நரசிம்மவர்மன் காலத்தில் கட்டப்பட்டது. மூலவர் வேங்கடகிருஷ்ணர் என்றபோதி லும், உற்சவராகிய பார்த்தசாரதி பெயரில் கோவில் அழைக்கப்படுகிறது. இக்கோவிலில், நரசிம்மர் மற்றும் கிருஷ்ணருக்கு, தனி சன்னிதிகள் உள்ளன.கோவில் கோபுரங்களிலும், மண்டப துாண்களிலும், தென்னிந்திய கட்டடக் கலையை வலியுறுத்தும், சிற்ப வேலைப்பாடு நிறைந்து உள்ளது.பல்வேறு சிறப்புகளை பெற்ற பார்த்தசாரதி கோவிலில், தற்போது திருப்பணி நடந்து வருகிறது. கோவில் துாண்கள் மற்றும் சிற்பங்கள்புதுப்பிக்கப்படுகின்றன.
கோவில் மூலவர் சன்னிதிக்கு செல்லும் வழியில், துவார பாலகர் அமைந்துள்ள மண்டபத்தின் தரைப்பகுதியில், மிகப்பெரிய கருங்கல் கற்கள் பதிக்கப்பட்டு இருந்தன. தற்போது, அந்த கற்களை அகற்றிவிட்டு, மார்பிள் கற்கள் பதிக்கும் பணி நடந்து வருகிறது. இதுகுறித்து, கோவில் ஊழியர்கள் மற்றும் பக்தர்கள் கூறியதாவது: மண்டபத்தின் தரையில் பதிக்கப்பட்டிருந்த கற்கள், மிகவும் பழமையானவை. ஆழ்வார்கள் அந்த இடத்தில் அமர்ந்து, பாசுரம் பாடியுள்ளனர். பெரிய மகான்கள் எல்லாம் வந்து சென்ற இடம். அந்த தரையில் அமர்ந்தாலே, மனதில் அமைதி உருவாகும்.தரை எவ்வித சேதமும் அடையாத நிலையில், கோவில் நிர்வாகம், தேவையின்றி அந்த கற்களை பெயர்த்தெடுத்துவிட்டு, மார்பிள் கற்களை பதிக்கிறது.பழைய தரையில் நடக்கும்போது, கால்களுக்கு அக்குபஞ்சர் சிகிச்சை அளித்ததுபோல், இதமாக இருக்கும். அவற்றை அகற்றிவிட்டு, மார்பிள் பதிக்கும்போது, முதியோர் நடக்க முடியாமல், சிரமப்படும் நிலை ஏற்படும். தேவையின்றி, யாரோ சிலர் தரையை மாற்ற பணம் தருகின்றனர் என்பதற்காக, கோவிலின் புனிதத்தை சிதைக்கின்றனர். மார்பிள் கற்களுக்கு பதில், பழைய கருங்கல் கற்களை பதிக்க, கோவில் நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, பக்தர்கள் தெரிவித்தனர்.