பதிவு செய்த நாள்
28
ஏப்
2015
12:04
சிதம்பரம்: நடராஜர் கோவிலில் கடந்த 1987ல் நடந்த கும்பாபிஷேகத்தின்போது, அப்போதைய அரசு பொது மக்களுக்கு வழங்கிய சிறப்பு சலுகைகள் போல் தற்போது நடைபெறவுள்ள கும்பாபிஷேகத்திற்கு வழங்காததால் சிதம்பரம் நகர மக்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். சிதம்பரம் நடராஜர் கோவிலில், கடந்த 1987ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடந்தது. அதன்பிறகு, வரும் மே 1ம் தேதி மகா கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. 1987ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடந்தபோது மக்கள் பிரதிநிதிகள் மற்றும் அரசு அதிகாரிகள், சிதம்பரம் பகுதி மக்களுக்கு சிறப்பு சலுகைகளைப் பெற்றுத் தந்தனர். அப்போதைய முதல்வர் எம்.ஜி.ஆர்., சிதம்பரம் நகருக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் 50 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து, அதன் மூலம் சாலை, குடிநீர், மின் விளக்கு, கழிவறை போன்றவை முழு அளவில் செய்யப்பட்டு, நகரம் வளர்ச்சி அடைந்தது. அதுமட்டுமின்றி, சிதம்பரம் பகுதி மக்களுக்கு மட்டும் கும்பாபிஷேக சிறப்பு சலுகையாக, ரேஷன் பொருள்கள் அறிவிக்கப்பட்டது. அதில், ரேஷன் கடைகளில் ஒரு கிலோ அரிசி ரூ.3.25 பைசாவாக இருந்தபோது, ஒரு ரேஷன் கார்டுக்கு வழக்கமாக அளிக்கப்படும் 20 கிலோ அரிசியுடன் கூடுதலாக 20 கிலோ அரிசி, 3 கிலோ சர்க்கரையுடன் கூடுதலாக 2 கிலோ, மண்ணண்ணெய் 10 லிட்டர் என சிறப்பு சலுகையாக வழங்கப்பட்டது. தற்போது கும்பாபிஷேகத்தையொட்டி, பொதுமக்களுக்கு அடிப்படை வசதிகள் செய்யவும், சிறப்பு சலுகைகள் பெற்றுத் தரவும் மக்கள் பிரதிநிதிகள், அதிகாரிகளுக்கு ஆர்வம் இல்லை. ஸ்ரீரங்கம் கோவில் கும்பாபிஷேகம், கும்பகோணம் மகா மகத்திற்கு அரசு சிறப்பு நிதி ஒதுக்கீடு செய்தது. ஆனால் பிரசித்தி பெற்ற சிதம்பரம் நடராஜர் கோவில் கும்பாபிஷேகத்திற்கு நிதி ஒதுக்காமலும், சிறப்பு சலுகைகள் வழங்காமலும் அரசு பாராமுகமாக இருப்பதால், நகர மக்கள் ஏமாற்றமடைந்துள்ளனர். கும்பாபிஷேகத்திற்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், மிக குறைந்த அளவில் அடிப்படை வசதிகள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்ய மாவட்ட நிர்வாகம் இன்னும் ஆலோசனைக் கூட்டம் தான் நடத்தி வருகிறது.