பதிவு செய்த நாள்
08
மே
2015
11:05
கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி முருகன் கோவில் குளம், தற்போது துார் வாரப்படாமல், புதர்கள் மண்டி கிடப்பதால், சமூக விரோத செயல்கள் அரங்கேறுகின்றன. கும்மிடிப்பூண்டி நகரின் மத்தியில், ஞானவேல் முருகன் கோவில் முகப்பில் குளம் உள்ளது. பல ஆண்டு காலமாக துார் வாரப் படாததால், குளம் முற்றிலும் வற்றிப்போய், பல இடங்களில் மண் மேடாகவும், புதர் மண்டியும் கிடக்கிறது. குளத்தை சுற்றியுள்ள பாதைகள், சிறுநீர் கழிக்கும் இடமாகி போனதால், அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது. கேட்பாரற்று போனதால், குளத்திற்குள் உள்ள மண் திட்டுகளில் அமர்ந்து, சரக்கு அடிப்பது உள்ளிட்ட சமூக விரோத செயல்களில் சிலர் ஈடுபடுகின்றனர். இந்து அறநிலைய துறையினர், கோவில் குளத்தை துார்வாரி, முறை யாக பராமரிக்க வேண்டும். சுற்றியுள்ள பகுதியை பேரூராட்சி நிர்வாகம் துாய்மையாக வைத்திருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, ஆன்மிக அன்பர்களும், பகுதிவாசிகளும் எதிர்பார்க்கின்றனர்.