மதுரை: பச்சைப்பட்டுடுத்தி தங்கக்குதிரை வாகனத்தில் மதுரை வைகை ஆற்றில் மே 4ல் எழுந்தருளி பக்தர்கள் மனம் குளிவித்த கள்ளழகர், நேற்று அதிகாலை தல்லாகுளம் கருப்பணசுவாமி கோயில் முன் பூப்பல்லக்கில் எழுந்தருளி அழகர்மலைக்கு புறப்பட்டார். வைகையில் எழுந்தருளிய கள்ளழகர் ராமராயர் மண்டபத்தில் பகல் 12 மணிக்கு தீர்த்தவாரி நடந்தது. இரவு 9 மணிக்கு வண்டியூர் வீரராகவப்பெருமாள் கோயிலில் எழுந்தருளினார். மே 5ல் தேனுார் மண்டபம் சேஷ வாகனத்தில் அருள்பாலித்தார். பின் கருட வாகனத்தில் எழுந்தருளிய கள்ளழகர், மண்டூக முனிவருக்கு சாபம் தீர்த்து காட்சி தந்தார். அன்று இரவு ராமராயர் மண்டபத்தில் தசாவதாரம் நடந்தது. நேற்று அதிகாலை 2:30 மணிக்கு தல்லாகுளம் கருப்பண சுவாமி கோயிலில் கள்ளர் கோலத்துடன் பூப்பல்லக்கில் எழுந்தருளினார். நேற்றிரவு 1 மணிக்கு சுந்தர்ராஜன்பட்டி சிவகங்கை சமஸ்தானம் மறவர் மண்டபம் சென்றார். பின் அப்பன்திருப்பதி, கள்ளந்திரி மண்டகப்படிகளில் எழுந்தருளிய கள்ளழகர், இன்று (மே 8) காலை 9 முதல் 10.30 மணிக்குள் அழகர்கோவில் சென்றடைகிறார். நாளை (மே 9) உற்சவசாந்தி நடக்கிறது.