பாரதப்போர் நடந்த இடம் குருஷேத்திரம் பின்னாளில் அதன் பெயர் தானேசுவரம் என்பதாகும். இதை ஹர்ஷவர்த்தன் ஆட்சி செய்தான். அவன் ஆட்சியில் அமர்ந்ததும் திக்விஜயம் செய்யப் புறப்பட்டான். ஹர்ஷர் தனது படையுடன் சரசுவதி நதிக்கரையில் வந்து தங்கினான். அந்த ஊர்த்தலைவன் அரசனைப் பார்க்க வந்தபோது தங்கக்காசு கொண்டு வந்து காணிக்கையாகக் கொடுத்து வணங்கினான். அப்பொன்காசை ஹர்ஷர் மகிழ்ச்சியுடன் கை நீட்டி வாங்கியபோது அது கை தவறி மண்ணில் விழுந்தது. அதை அபசகுணமாக கருதி மனம் வருந்தினார்கள். அருகிருந்த சிலர், அப்போது ஹர்ஷர், இது தீய சகுனமல்ல, நல்ல சகுனமே! இதோ பாருங்கள் காசு விழுந்த இடத்தில் முத்திரை பதிந்துள்ளது. இது பூமி அனைத்தும் என் முத்திரைக்குள் அகப்படும் என்பதற்கு சாட்சியல்லவா? என்று கூறி மகிழ்ந்தார். உடனிருந்தவர்கள் மன்னனின் முதிர்ந்த அறிவைக் கண்டு ஆச்சரியத்தால் மூழ்கினர்.