பழநி: பழநிகோயிலில் அக்கினி நட்சத்திர விழா நேற்று (மே 8) துவங்கி மே 21 வரை நடக்கிறது. இதனை முன்னிட்டு கிரிவீதியில் கடம்ப மரப்பூக்களின் சஞ்சிவீ மூலிகை காற்றை அனுபவிக்க பக்தர்கள் கிரிவலம் வருகின்றனர். ஒவ்வொரு ஆண்டும் சித்திரை பின் ஏழு, வைகாசி முன் ஏழு நாட்களில் அக்கினி நட்சத்திர விழா பழநியில் கொண்டாப்படும். இவ்வாண்டு நேற்று அக்னி நட்சத்திர (சித்திரை கழுவு) துவக்கநாளை முன்னிட்டு பழநி பெரியநாயகியம்மன் கோயிலில் கைலாசநாதருக்கு ""சீதக்கும்பம் வைத்து சிறப்பு அபிஷேகம், மகா தீபாராதனை நடந்தது. சித்திரை கழுவு விழா நாட்களில் மலைக்கோயில் கிரிவீதியில் பூத்துக்குலுங்கும் கடம்ப மரங்களிலிருந்து சஞ்சீவி மூலிகை காற்று வீசுவதாகவும், அந்த வாசனையை நுகர்ந்தால் வயிற்றுவலி, உஷ்ணம் போன்ற வெப்ப வியாதிகள் குணமாகும் என்ற "ஐதீகம் உள்ளது. இதனால் பெண்கள் கடம்ப மரப்பூக்களை தலையில் சூடி அதிகாலை, மாலை நேரங்களில் சஞ்சீவி மூலிகை காற்றை அனுபவிக்க கிரிவலம் வருகின்றனர். விழா நிறைவு நாளான மே 21ல் மலைக்கோயில் அதிகாலை 4 மணிக்கு நடைதிறக்கப்பட்டு விஸ்வரூப தரிசனம் நடைபெறும்.