பதிவு செய்த நாள்
13
மே
2015
10:05
தஞ்சாவூர்: தஞ்சை பெரிய கோவிலில், நந்திக்கு, 100 ஆண்டுகளுக்கு பின், சந்தன அலங்காரம் நடந்தது. தஞ்சை பிரகதீஸ்வரர் கோவில், கி.பி., 1,010ம் ஆண்டு சோழர் மன்னர் ராஜராஜ சோழனால் கட்டப்பட்டது. தமிழக கட்டட கலைக்கு எடுத்துக்காட்டாக விளங்கும் இக்கோவிலை, யுனெஸ்கோ நிறுவனம் உலக புராதன சின்னமாக அறிவித்துள்ளது. இங்கு, சோழ மன்னர்கள் ஆட்சி காலத்தில், பல, விழாக்கள் நடத்தப்பட்டன. தொடர்ந்து, நாயக்க மன்னர்கள் காலத்திலும், விழாக்களை நடத்தி வந்தனர். கடந்த, 16ம் நூற்றாண்டில், நாயக்க மன்னர்களால், தஞ்சை பெரிய கோவிலில், 13 அடி உயரம் கொண்ட மகா நந்தி சிலை உருவாக்கப்பட்டு, சந்தன அலங்காரம் நடந்தது. காலப்போக்கில், நந்திக்கு நடத்திய சந்தன அலங்காரம் தடைப்பட்டது. தற்போது, 100 ஆண்டுகளுக்கு பின், நேற்று, நந்திக்கு, 250 கிலோ எடை சந்தனத்தை கொண்டு, அலங்காரம் நடந்து, அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து, காலை, 9:00 மணிக்கு, சிறப்பு பூஜை மற்றும் மகா தீபாராதனை நடந்தன.