பதிவு செய்த நாள்
25
மே
2015
12:05
கோபி : வனப்பகுதியில் மழைவாழ் மக்கள் 74 கிடாக்களை வெட்டி சுவாமிக்கு பூஜை செய்தனர். அந்தியூர் வனச்சரகத்துக்கு உட்பட்ட, தொட்டகோம்பை வனப்பகுதியில், மலை ஜாதி ஆண்கள் 170, பெண்கள் 160 பேர் உள்ளனர். பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் 138 ஆண்களும், பெண்கள் 128 பேர், மிகவும் பிற்படுத்தப்பட்டோரில் 39 ஆண்களும், 48 பெண்களும் உள்ளனர். மலை ஜாதியினர் பிரிவில், பள்ளி வயது குழந்தைகளாக, ஆறு முதல் 11 வயதுக்குள் 33 பேரும், 11 முதல் 14 வயதுக்குள் 19 குழந்தைகள் உள்ளனர். மழைவாழ் மக்கள் வழிபடும் வகையில், தொட்டகோம்பையில் 200 ஆண்டுக்கு முந்தைய முனியப்ப சுவாமி கோவில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் சித்திரை, வைகாசி மாதத்தில் பொங்கல் விழா மலைவாழ் மக்களால் கொண்டாடப்படுகிறது.
தொட்டகோம்பை, கொங்காடை, ஒசூர், குன்றி, கரும்பாறை, சுண்டக்கரடு, பர்கூர் உள்ளிட வனப்பகுதி மலைவாழ் மக்கள் கோவில் முன் நேற்று அதிகாலை குவிந்தனர்.தொட்டகோம்பை தலைமை பூசாரி குட்டி பூஜை செய்தார். பின்னர் நேர்த்தி கடனாக 74 கிடாய்களை வெட்டி வழிபட்டனர். கோவிலை ஒட்டிய பகுதியில் ஐந்து அண்டாக்களில் சாதம் மற்றும் கறிவிருந்துக்கு தயார் செய்தனர். மதியம் இரண்டு மணிக்கு மேல் கோவிலுக்கு வந்த பக்தர்களுக்கு கறி விருந்து அன்னதானமாக வழங்கப்பட்டது. ஆட்டுகறி வறுவலுடன், சுடச்சுட சாதம் பரிமாறப்பட்டது. மாலை 6 மணி வரை விருந்து தொடர்ந்தது. சுமார் நான்காயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்றனர். வரும் 29ம் தேதி நடக்கும் மறுபூஜைக்காக பத்துக்கும் மேற்பட்ட கிடாய்களை, கோவிலில் மலைவாழ் மக்கள் விட்டு சென்றனர்.