பதிவு செய்த நாள்
25
மே
2015
12:05
பவானி : பவானியில் சின்ன கோவில் என அழைக்கப்படும் காசி விஸ்வநாதர் கோவில் தேர், 200 ஆண்டுகள் பழமையானது. இத்தேர் முற்றுலும் சேதமடைந்து, தற்போது புதுப்பிக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. பவானி, காவிரி வீதியில் விசாலாட்சி உடனமர் காசிவிஸ்வநாதர் கோவில் உள்ளது. இக்கோவில், பவானி மக்களால் சின்ன கோவில் என அழைக்கப்படுகிறது. இக்கோவில் தேர் அச்சு முறிந்து, பழுதடைந்து, கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக பங்குனி உத்திர தேரோட்டம் நடத்த முடியாமல் உள்ளது. இருப்பினும், காசி விஸ்வநாதர் கோவில் தேரோட்டத்தை, செல்லியாண்டியம்மன் கோவில் தேரை கொண்டு நடத்தப்பட்டு உள்ளது.இதனால், இக்கோவில் தேரை புதுப்பிக்க வேண்டுமென, பக்தர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். பவானி, சங்கமேஸ்வரர் கோவில் நிர்வாகம், காசி விஸ்வநாதர் கோவில் தேரை புதுப்பிக்க நடவடிக்கை எடுத்தது.இத்தேரை, 2.70 லட்சம் ரூபாய் மதிப்பில் சீரமைக்க முடிவு செய்தனர். சிற்பிகளை கொண்டு, தேர் முழுமையாக பிரிக்கப்பட்டு, முழுமையாக சேதமான மரத்தடிகள் அகற்றப்பட்டது. பவானி சிவனடியார் திருக்கூட்டம் அறக்கட்டளை சார்பில், தேருக்கு தேவையான அனைத்து மரக்கட்டைகளை வாங்கி கொடுத்தனர்.கடந்த சில நாட்களுக்கு முன், சிறப்பு பூஜையுடன், தேரை சீரமைக்கும் பணி துவங்கியது.
சேலம், தம்மம்பட்டியை சேர்ந்த சிற்பிகள் சொக்கலிங்கம், செல்வராஜ் ஆகியோர் கூறியதாவது:இக்கோவில் தேர், 12.25 அடி உயரம் உடையது. 120 முதல், 150 சிற்பங்கள் இருந்தது. அதேபோல், சக்கரங்கள் பழுதடைந்ததால், கடந்த சில ஆண்டுக்கு முன், திருச்சி பெல் நிறுவனத்தில் தயாரிக்கப்பட்ட அச்சுகளும், இரும்பு சக்கரங்களும் பொறுத்தப்பட்டு உள்ளது.ஆனால், தேரின் மூன்று அடுக்கு நிலைகளிலும், மரக்கட்டைகள் சேதமடைந்ததால், தேரை ஓட்ட முடியாத நிலை ஏற்பட்டு, நிறுத்தப்பட்டு உள்ளது.தற்போது தேரை புதுப்பிக்க, இலுப்பை மரங்களை கொண்டு பணியை துவங்கி உள்ளோம். இதற்காக, 450 சதுர அடி மரங்கள் தேவைப்படும், என, எதிர்பாக்கப்படுகிறது. தற்போதைய நிலையில், தேரை பார்த்தால், 150 ஆண்டுகளுக்கு மேல் பழமையானதாக இருக்கலாம்.சீரமைப்புக்கு தேவையான மரங்கள் வரவழைக்கப்பட்டுள்ளதால், தேர் அமைக்கும் பணி ஒரு புறமும், சிற்பப்பணி மறுபுறமும் நடக்கிறது. மூன்று மாதங்களில் தேர் செய்யும் பணி நிறைவடையும்.இவ்வாறு அவர் கூறினார்.