சேலையூர்: சேலையூர் கிராம குளத்தை சுற்றி, படிகள் கட்டும் பணி நடந்து வருகிறது. சேலையூர் கிராமத்தில் பழமையான குளம் உள்ளது. ஒரு காலத்தில், சுற்றுப்புற பகுதிகளுக்கு குடிநீருக்காக பயன்பட்ட இக்குளம், நாளடைவில் பராமரிப்பின்றி பாழடைந்தது. இதனால், குளிக்கவும், துணி துவைக்கவும், கால்நடைகள் குடிப்பதற்கும் மட்டுமே குளத்து நீர் பயன்பட்டது. பொதுமக்கள் குளத்தில் மூழ்கி இறப்பதும் அவ்வப்போது நடந்து வந்தது. இதனால், பழமையான அக்குளத்தை பாதுகாக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. இதையடுத்து, துார்வாரி ஆழப்படுத்தி, சுற்றி சுற்றுச் சுவர் கட்டப்பட்டது. தற்போது, 30 லட்சம் ரூபாய் செலவில், குளத்தை சுற்றி படிக்கட்டுகள் மற்றும் நடைபாதை அமைக்கும் பணி நடந்து வருகிறது.