பதிவு செய்த நாள்
26
மே
2015
11:05
ராமேஸ்வரம் : ராமேஸ்வரம் கோயில் சார்பில் கட்டப்பட்டுள்ள இலவச தங்கும் விடுதி, கல்யாண மண்டபம் பயன்பாட்டிற்கு வராததால், பக்தர்கள் அவதிப் படுகின்றனர். ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலுக்கு வரும் ஏழை பக்தர்களின் வசதிக்காக, ரயில்வே ஸ்டேஷன் அருகில் கோயில் நிர்வாகம் சார்பில் ரூ.1 கோடியில் இலவச தங்கும் விடுதிகள் கட்டப்பட்டு உள்ளன. இதன் கட்டுமான பணிகள் முடிந்து 2 ஆண்டுகள் ஆகியும், திறக்கப்படாததால் தூசி படிந்து, சுற்றிலும் முட்செடிகள் முளைத்து, விஷ பாம்புகளின் புகலிடமாக மாறி உள்ளது. இதனால், பக்தர்கள் அடிப்படை வசதிகள் இல்லாத கோயில் ரதவீதி, அக்னி தீர்த்த கடற்கரை, சத்திரத்தில் தஞ்சம் புகும் நிலை உள்ளது.கோயில் கோசாலை அருகே தனியார் நிறுவனம் ஒன்று ரூ.1 கோடி செலவில் கட்டி தந்துள்ள திருக்கல்யாண மண்டபமும், கடந்த ஓராண்டுக்கும் மேலாக திறக்கப் படாமல் உள்ளது. ஆடி திருக்கல்யாணத் திற்கு இன்னும் 60 நாட்களே உள்ளதால், கல்யாண மண்டபத்தையும், தங்கும் விடுதியையும் திறக்க, முதல்வர் ஜெ., உத்தரவிட வேண்டும் என, பக்தர்கள் எதிர்பார்க்கின்றனர்.