பதிவு செய்த நாள்
27
மே
2015
11:05
பெரம்பலூர்: பெரம்பலூர் நகராட்சிக்குட்பட்ட சங்குப்பேட்டை பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீமுத்துமாரியம்மன் கோயில் தேரோட்டம் நேற்று மாலை வெகுவிமர்சையாக நடந்தது. பெரம்பலூர் நகராட்சிக்குட்பட்ட சங்குப்பேட்டை பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீமுத்துமாரியம்மன் கோயில் தேரோட்டத்தையொட்டி கடந்த 17ம் தேதி பூச்சொரிதல் விழா நடந்தது. 18ம் தேதி சந்தன அலங்காரம், அம்மன் சிறப்பு வழிபாடு, கிராம பூஜை, 19ம் தேதி காப்பு கட்டுதல் நிகழ்ச்சியும், 20ம் தேதி மாரியம்மன் சிறப்பு வழிபாடு, 21ம் தேதி மூப்பனார்வீதி உலாவும், 22ம் தேதி சக்தி அழைத்தல், அம்மன் அன்ன வாகனத்தில் வீதி உலா ஆகிய நிகழ்ச்சிகள் நடந்தது. 23ம் தேதி அம்மன் ரிஷப வாகனத்திலும், 24ம் தேதி மாவிளக்கு, அம்மன் சிம்ம வாகனத்தில் வீதி உலா, 25ம் தேதி அலகு குத்துதல், அக்னி சட்டி, பால் குடம் எடுத்தல், குதிரை வாகனத்தில் வீதி உலா நடந்தது. விழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேரோட்டம் 26ம் தேதி நேற்று மாலை நடந்தது. பெரம்பலூர் 11, 12, 13வது வார்டு பகுதியை சேர்ந்த பொதுமக்கள் திரளாக பங்கேற்று தேரை வடம் பிடித்து இழுத்து அம்மன் அருள் பெற்றனர். இன்று 27ம் தேதி மஞ்சள் நீராடுதல், குடிவிடுதல், அம்மன் இரவு ஊஞ்சல் நிகழ்ச்சியும், ஜூன் 2ம் தேதி 8ம் நாள் திருவிழாவுடன் விழா நிறைவடைகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை கிராம காரியஸ்தர்கள் சங்குசரவணன், வெள்ளைச்சாமி, துரைசாமி, பெரியசாமி, ராஜா, மணி, கருணாமூர்த்தி ஆகியோர் செய்திருந்தனர்.