ஆதிசங்கரர் ஸநாதன தர்மோத்தாரத்திற்காக அவதாரம் செய்த சாக்ஷாத் பரமேச்வரன். அவர் 32 வருஷங்கள் தான் இவ்வுலகில் வாழ்ந்திருந்தார். ஆனால், அவர் செய்த காரியங்கள் மட்டும் அபாரமானவையாகும். சங்கரரைப் பற்றி சுருக்குமாக ஒரு ஸ்லோகத்தைச் சொல்வதுண்டு.
அஷ்டவர்ஷ சதுர் வேதி த்வாதஸே ஸர்வ ஸாஸ்த்ர வித் ஷோடஸே க்ருதவான் பாஷ்யம் ஸ்தவாத்ரிம் ஸே முனி ரப்யதாத் என்று.
எட்டு வயது வருவதற்குள்ளே ஸகல வேதங்களையும் படித்து முடித்தவர். 12 வருஷங்கள் வருவதற்குள்ளே ஸகல சாஸ்த்ரங்களையும் படித்து முடித்தவர். 16 வது வயது வருவதற்குள்ளே எல்லா பாஷ்ய க்ரந்தங்கள், லகு பாஷ்யங்கள், லகு ப்ரகரணங்கள் என அவ்வளவு க்ரந்தங்களையும் ரசனை செய்தார். 32 வயதிற்குள்ளே திக் விஜயத்தையும், தன் அவதார கார்யம் அவ்வளவையும் செய்தார் என்று சொன்னால் அப்பேர்ப்பட்ட ஓர் வ்யக்தி ஜகத்திலேயே மற்றும் இந்த விசாலமான காலத்திலேயே இன்னொருவர் பிறந்தாரா என்று கேட்டால் பிறக்கவில்லை என்று தாராளமாகச் சொல்லலாம்.
ஆதிசங்கரர் அவதாரம் செய்த வைசாக சுக்ல பஞ்சமி என்கிற தினம் எப்படி ஸ்ரீராமநவமி, க்ருஷ்ண ஜன்மாஷ்டமி, ந்ருஸிம்ம ஜயந்தி முதலியன நமக்கு மிக பவித்ரமான நாள்களோ அதே போல் இந்த வைசாக சுக்ல பஞ்சமி நமக்கு மிகவும் பவித்ரமான நாளாக இருக்க வேண்டும். அதை நாம் அதே மாதிரி ஆசரிக்க வேண்டும். நம் தேசத்தில் பெரிய வித்வான்கள், பெரிய அதிகாரத்தில் இருந்த பெரியோர்கள் எல்லோரும் ஆதி சங்கரருடைய மகத்துவத்தைப் பற்றி தெரிந்து கொண்டு அவருரை பற்றி மிக விசேஷமாக எழுதி இருக்கிறார்கள். ஆகையால் தான் ஆதிசங்கரருடைய ஜயந்தியை பெரிய அளவில் கொண்டாட வேண்டும் என்பதற்காக பாரதத்தை பரிபலானம் செய்பவர்களின் மனத்தில் சங்கல்பம் உதித்தது. நாம் ரொம்பவும் எல்லோரும் ஸந்தோஷப்பட வேண்டிய விஷயம். ஆதிசங்கரர் அவதாரம் செய்து பல வருஷங்கள் ஆகி விட்டன. எத்தனை வருஷங்கள் ஆனாலும் ஆதிசங்கரரைப் பற்றி நம்முடைய பக்தி ஸ்ரத்தைகளுக்குக் கொஞ்சமும் கூட குறைவு இல்லை.
ஆச்சாரிய பெருமான் காட்டிக் கொடுக்க அவனை காண்பது தானே மரபு? சகல சமயசம்பிரதாயங்களையும் உள்ளடக்கிய அத்வைத மகா ஆச்சார்யரான ஆதி சங்கர பகவத் பாதாள் ஐக்கியத்தையே முக்கியமாக நாட்டியவர்.