பதிவு செய்த நாள்
09
செப்
2011
03:09
சங்கரர் சில சீடர்களை மட்டும் அழைத்துக் கொண்டு பத்ரி சென்றார். அங்கு சிலகாலம் தங்கியிருந்து அத்வைத தத்துவத்தை மக்களுக்கு எடுத்துரைத்தார். சிலகாலம் பத்ரியில் வசித்துவிட்டு கேதாரம் அடைந்தார். அங்குள்ள கடும் குளிரை அவரது சீடர்களால் தாங்கமுடியவில்லை. மிகவும் சிரமப்பட்டனர். சங்கரர் சிவபெருமானைப் பிரார்த்தனை செய்ததால், அங்கு ஒரு வெந்நீர் ஊற்று தோன்றியது. இன்றும் அந்த ஊற்றை நாம் காணலாம். சிவபெருமானின் அவதாரமாகிய சங்கரர் தமது 32வது(கி.பி.788-820) வயதை அடைந்தார். தமது அவதார நோக்கம் பூர்த்தியாகிவிட்டதையும், தமது ஆயுள் முடிந்துவிட்டதையும் உணர்ந்து சங்கரர் தனது உடலை தியாகம் செய்ய எண்ணினார். அப்போது தேவர்கள் பூமாரி பொழிந்து சிவபெருமானின் பெருமைகளைப் பாடினார்கள். சிவனது வாகனமாகிய காளையும் வந்தது. சங்கரர் காளையில் அமர்ந்து கைலாயம் சென்றார். இமயமலையில் சுமார் 11, 750 அடி உயரத்தில் கேதாரநாத்தில் ஆதிசங்கரர் பூவுலகில் இருந்து மறைந்த இடத்தில் ஸ்ரீசங்கராச்சாரியகைவல்யதாமா என்ற பெயரில் ஆலயம் கட்டப்பட்டுள்ளது.
அத்துவைதத் தத்துவங்கள்: வேதங்களை நன்கு ஓதியவர், பாவமற்றவர், ஆசையற்றவர், பிரம்மத்தை அறிந்தவர் இவர் தான் உண்மையான ஆசாரியன். இத்தகைய ஆசாரியனைப் பக்தியுடன் வணங்கி, அவருக்குத் தொடர்ந்து தொண்டு செய்து கொண்டு வந்தால், சீடன் ஆத்ம ஞானத்தை அடைவான். கண்ணாடி போன்று மனது சுத்தமானால், அதில் ஞானம் பிரகாசிக்கும். ஆகையால் சித்தத்தை சுத்தமாக வைத்துக் கொள்ள முயற்சி செய்.
நல்ல அறிவொளி பெற்ற யோகி ஞானக்கண் கொண்டு, புவனம் அனைத்தையும் தன்னுள்ளே பார்க்கிறான். எதையும் ஆத்மாவாகக் காண்கிறான். அமைதியான மனநிலையிலிருந்து அறிவு பிறக்கிறது. அறிவின் காரணமாக இந்திரிய போகங்களிலிருந்து விடுதலை பெறுகிறோம். இதன் காரணமாக ஆத்மஞானம் உண்டாகிறது. இதன் காரணமாக சாந்தி பிறக்கிறது. நாமும் பிரம்மமும் வேறில்லை என்கிற சரியான ஞானத்தின் காரணமாக நாம் ஜனன, மரண பிடியிலிருந்து விடுபடுகிறோம். சத், சித், ஆனந்தமாக உள்ள ஆத்மாவை, தொடர்ந்து சாதகத்தின் மூலமாகத்தான் அடைய முடியும். ஆகவே ஞானம் வேண்டுவோர் பிரம்மத்தையோ, ஆத்மாவையோ நீண்ட நேரம் தியானம் செய்ய வேண்டும்.
எப்படி ஒரு விளக்கு ஒரு ஜாடிக்கோ, சட்டிக்கோ பிரகாசம் கொடுக்கிறதோ, அதே போன்று ஆத்மா ஒன்றுதான் நம் மனது, இந்திரியங்கள் முதலியவற்றுக்கு பிரகாசம் கொடுக்கிறது. ஒரு எரியும் விளக்கைப் பார்க்க இன்னொரு விளக்கு தேவையில்லை. அதே போன்று, ஆத்மாவே சுயம் பிரகாசமானதால் அது தெரிய இன்னொரு பிரகாசம் தேவையில்லை. சங்கரர் சொல்கிறார், எத்தனையோ சாத்திரங்களில் சொல்லப்படும் உண்மையை நான் அரை சுலோகத்தில் சொல்லி உங்களுக்கு விளக்க வைக்கிறேன் என்று. அந்த ஸ்லோகம் என்ன தெரியுமா! பிரம்மம் தான் சத்தியம். ஜகத் மித்யை. ஜீவன் பிரம்மத்தைத் தவிர வேறில்லை.