பதிவு செய்த நாள்
22
ஜூன்
2015
10:06
வாராஹி - மனச் சஞ்சலங்கள், வீண் கலக்கம், சத்ரு பயம் ஆகியவற்றை விலக்கி, சந்தோஷ வாழ்வளிக்கும் இந்த தேவி, சப்த மாதர்களில் ஒருத்தி. சப்தமாதர்களின் மகிமையை தேவிமஹாத்மியம் முதலான ஞானநூல்கள் விரிவாக விளக்குகின்றன. மார்க்கண்டேய புராணத்தில் அமைந்திருக்கிறது. தேவிமஹாத்மியம். 700 மந்திரங்களைக் கொண்டதால் சப்த ஸதீ என்று போற்றப்படுகிறது. இந்த நூல், அசுரர்களாகிய சும்ப-நிசும்பர்களை அழிக்க ஆதி சக்திக்கு உதவியாக அவதரித்தவர்கள் சப்தமாதர்கள் என்று விவரிக்கிறது. இந்த அசுரர்கள். கடும் தவத்தின் பலனாக தாங்கள் பெற்ற வரத்தின் மூலம் ஈரேழு உலகங்களையும் வசப்படுத்தி, சகல உயிர்களையும் துன்புறுத்தி வந்தனர். அவர்களின் கொடுமை பொறுக்காத தேவர்கள், ஆதிசக்தியைப் பிரார்த்தித்தனர்.
அவர்களைக் காக்கத் திருவுளம் கொண்ட ஆதிசக்தி, கவுசிகீ தேவியாய் பூவுலகம் வந்ததையும், தொடர்ந்து அவள் காளியாக, சாமுண்டியாக சும்ப நிசும்பர்களின் தளபதிகளை அழித்த திருக் கதையையும் விளக்குகிறது தேவிமஹாத்மியம் முடிவில் சும்ப நிசும்பர்களே போர்க்களம் புகுந்தனர். அவர்களுடைய பெரும் சேனை, ஆதிசக்தியைச் சூழ்ந்துகொள்ள, அங்கே ஓர் அற்புதம் நிகழ்ந்தது! அசுர குலத்தை அழிக்க.... பிரம்மதேவனின் சக்தியான பிராம்மி, மகேஸ்வரனின் சக்தியான மாகேஸ்வரி, குமரனின் வடிவினளான கவுமாரி, விஷ்ணுவின் சக்தியான வைஷ்ணவி, நரசிம்மத்தின் அம்சமாக நாரசிம்ஹி, இந்திரனின் சக்தியம்சமான இந்திராணி ஆகியோருடன் திருமாலின் வராஹ வடிவை ஏற்றவளாய் வாராஹியும் எழுந்தருளினாள். இந்த ஏழு பெண் தெய்வங்களும் அசுரப்படையை சம்ஹாரம் செய்தனர் என்று நீள்கிறது. தேவி மஹாத்மியம் சொல்லும் திருக்கதை.
இந்த தேவியர் எழுவரையும் முறைப்படி வழிபட, அனைத்து நலன்களும் கிடைக்கும். நினைத்த காரியங்கள் ஈடேறும் என்பர். பிராம்மியை வழிபட்டால் ஞானம் பெருகும்; சரும நோய்கள் குணமாகும். மாகேஸ்வரியை வழிபட்டால், சர்வமங்களம் உண்டாகும். கவுமாரியை வழிபட்டால், ரத்தம் தொடர்பான நோய்கள் நீங்கும் வைஷ்ணவியை வழிபட்டால், விஷ ஜந்துக்களால் தொல்லைகள் ஏற்படாது. இந்திராணியை வழிபட்டால் தாம்பத்தியம் இனிக்கும் சாமுண்டியை வழிபட்டால் சகல தீவினைகளும் அகலும். வாராஹியை வழிபட்டால் எதிரிகள் பயம் நீங்கும்; மனதில் தைரியம் பிறக்கும். விவசாயம் செழிக்கவும் இந்தத் தேவியை வழிபடுவர். பஞ்சமி திதி நாட்களில் வாராஹிதேவிக்கு மிக உகந்தவை. இந்த நாட்களில் கோயில்களில் சப்தமாதர்கள் சன்னிதியில் அருளும் வாராஹிக்கு பூண்டு கலந்த, தோல் நீக்காத உளுந்து வடை, நவதானிய வடை, மிளகு சேர்த்த வெண்ணெய் எடுக்காத தயிர்சாதம், மொச்சை, சுண்டல், சுக்கு அதிகம் சேர்த்த பானகம், மிளகு சீரகம் கலந்து செய்த தோசை, குங்குமப்பூ, சர்க்கரை, ஏலம், லவங்கம், பச்சைக் கற்பூரம் கலந்த பால், கறுப்பு எள் உருண்டை, சர்க்கரை வள்ளிக் கிழங்கு, தேன் ஆகியவற்றைப் படைத்து வழிபடுவதால் விசேஷ பலன்களைப் பெறலாம். அனுதினமும் பஞ்சமி, தண்டநாதா, சங்கேதா, சமயேச்வரி, சமயசங்கேதா, வாராஹி, போத்ரிணி, சிவா, வார்த்தாளி, மகாசேனா, ஆக்ஞா சக்ரேச்வரி, அரிக்னீ ஆகிய 12 திருநாமங்களுடன் போற்றி கூறி, தியானித்து வழிபட்டால், சகல வரங்களையும் தந்தருள்வாள். வராஹிதேவி.