ரமலான் காலத்தில் மட்டுமல்ல! எப்போதுமே நல்ல சிந்தனைகளை மனதில் வளர்த்துக் கொள்ள வேண்டும். பிறர் பற்றி தவறாகப் பேசக்கூடாது. அவ்வாறு பேசினால் என்னாகும் என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள். “புறம்பேசுவது விபச்சாரத்தை விட கடுமையான பாவமாகும். விபச்சாரம் செய்யும் மனிதன் கூட பாவமன்னிப்பு கோரினால், அவனது மன்னிப்பை அல்லாஹ் ஏற்றுக்கொள்கின்றான். ஆனால், புறம்பேசுபவனை, அவன் யாரைப் பற்றி புறம் பேசினானோ, அவன் மன்னிக்காதவரை இறைவன் மன்னிப்பதில்லை,” என்கிறார் நபிகள் நாயகம். புறம்பேசி பாவத்தை சம்பாதித்தவர்களுக்கு, அதற்கான தண்டனையில் இருந்து விடுபட ஒரே ஒரு பிராயச்சித்தம் தான் இருக்கிறது. “நீ எவரைப் பற்றி புறம் பேசினாயோ, அவருடைய பாவங்கள் மன்னிக்கப்பட வேண்டுமென்று, இறைவனிடம் நீ இறைஞ்சுவது புறம்பேசியதற்கான பிராயச்சித்தங்களில் ஒன்றாகும். யாரையாவது பற்றி ஒருவர் புறம் பேசுகிறார். அவரிடமே நேரில் மன்னிப்பு கேட்க வேண்டுமென நினைக்கிறார். ஆனால், அவர் அந்த ஊரை விட்டுப் போய் விட்டிருக்கலாம். அவரைக் கண்டுபிடிக்கமுடியாத சூழ்நிலை அமையலாம். அத்தகைய நேரத்தில் இறைவனிடம் இறைஞ்சுவதன் மூலமும் பாவமன்னிப்பு கிடைக்கும். இனியேனும் புறம் பேசும் பழக்கத்தை விட்டொழிப்போம்.
இன்று நோன்பு திறக்கும் நேரம்: மாலை 6.49 மணி. நாளை நோன்பு வைக்கும் நேரம்: காலை 4.19 மணி.