பதிவு செய்த நாள்
07
ஜூலை
2015
11:07
சேலம்:சேலம், சிவன், முருகன், தட்சிணாமூர்த்தி கோவில்களில், குருப்பெயர்ச்சியை முன்னிட்டு, நேற்று அதிகாலை முதல் நடத்தப்பட்ட பரிகார பூஜை, சிறப்பு யாகத்தில், பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.குருப்பெயர்ச்சியை முன்னிட்டு, நேற்று நள்ளிரவு முதல் சேலத்தில் உள்ள தட்சணாமூர்த்தி, சிவன் கோவில்களில், சிறப்பு யாக பூஜை, பரிகார பூஜைகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்து. நேற்று முன்தினம் நள்ளிரவு, 1.03 மணி அளவில், குருபகவான் கடக ராசியில் இருந்து சிம்மராசிக்கு இடம் பெயர்ச்சி அடைகிறார். இந்த குருப்பெயர்ச்சியை முன்னிட்டு, சேலத்தில் உள்ள தட்சிணாமூர்த்தி, சிவன் கோவில்களில் சிறப்பு பூஜை, பரிகார பூஜை, யாகம் நடந்தது.
* சேலம், தாதுபாய்குட்டை ஓம்சக்தி வேம்பரசர் கோவில், குருபெயர்ச்சியை முன்னிட்டு, நேற்று காலையில், விக்னேஷ்வர பூஜை, அனுக்ஞை, புண்ணியாவாஜனை, குருப்பெயர்ச்சி பரிகார ஹோமம், குடும்ப சாந்தி, நட்சத்திர சாந்தி, தனிநபர் சாந்தி, மஹா பூர்ணாஹூதி ஆகியன நடந்தது. இதில், நூற்றுக்கணக்கான பக்தர்கள் வழிபட்டனர்.
* சேலம் - திருச்சி மெயின் ரோட்டில் உள்ள தட்சிணாமூர்த்தி கோவிலில், குருப்பெயர்ச்சியை முன்னிட்டு, நேற்று முன்தினம் மதியம் துவங்கி தொடர்ந்து, சிறப்பு பூஜை, ஹோமம் நடந்தது. நேற்று காலை குருப்பெயர்ச்சி மகா யாக வேள்வியும், சிறப்பு அபிஷேகம், குருபகவானுக்கு தங்க கவச சிறப்பு அலங்காரத்தில் பூஜை நடந்தது. தொடர்ந்து, ஏழு ராசிகளுக்கு பரிகார ஹோமம், பூஜை நடந்தது. இதில், திரளாக பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
* ஓமலூர் அருகே உள்ள பொன்னார்கூடல் காடையாம்பட்டியில் உள்ள காரியசித்தி வீரஆஞ்சநேயர் கோவிலில், குருப்பெயர்ச்சியை முன்னிட்டு, நேற்று காலையில் மங்கள இசை, விநாயகர் வழிபாடு, புண்யாஹவாசனம், அனுக்ஞை, வேதிகார்சனம், மூல மந்த்ர காய்த்ரீ மந்த்ர ஜபம், வேதபாராயணம், திரவ்யாஹூதி, மங்கள மஹா பூர்ணாஹூதி, குருபகவானுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார பூஜை நடந்தது. பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
சேலம் சுகவனேஸ்வர் கோவில், காசி விஸ்வநாதர் கோவில், அம்பலவாண ஸ்வாமி கோவில், ஊத்துமலை முருகன் கோவில், 1,008 சிவாலயம், உத்தமசோழபுரம் கைலாசநாதர் கோவில், தாரமங்கலம் கைலாசநாதர் கோவில், கந்தாஸ்ரமம் முருகன் கோவில் உட்பட முருகன், ஆஞ்சநேயர் கோவில்களில் குருப்பெயர்ச்சியை முன்னிட்டு, பக்தர்கள் தரிசனம் மேற் கொள்ள வசதியாக நேற்று அதிகாலை, 4.30 மணிக்கு கோவில்களின் நடை திறக்கப்பட்டது. தொடர்ந்து தட்சிணாமூர்த்தி, குருபகவானுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரத்தில் பூஜை நடந்தது. பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து வழிபட்டுச் சென்றனர். குருப்பெயர்ச்சியை முன்னிட்டு, கோவில்களில் கூட்டம் அதிகரித்ததை அடுத்து, பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.