Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 
 

நாயன்மார்கள் நாயன்மார்கள் மறைஞான சம்பந்தர் மறைஞான சம்பந்தர்
முதல் பக்கம் » மகான்கள்
18 சித்தர்கள்
Share
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

16 ஆக
2010
14:29

வல்லபசித்தர்

தாதி பொன்னனையாள் கண்ணீர் வடித்துக் கொண்டிருந்தாள். அவளது குடிலில் தகரம், செம்பு, பித்தளை பாத்திரங்கள் மட்டுமே இருந்தன. பெண்கள் திறமைசாலிகள். தங்களுக்கு கணவனோ, பிறரோ கொடுக்கும் பணத்திலோ, தாங்கள் உழைத்து சம்பாதித்ததிலோ சிறிதளவாவது மிச்சம் பிடித்து வெள்ளியிலோ, தங்கத்திலோ சிறுநகைஒன்றாவது வாங்கி விடுவார்கள். பொன்னனையாளும் அதற்கு விதிவிலக்கல்ல. சிவபக்தையான அவள், கூடல் மாநகராம் மதுரை அருகிலுள்ள திருப்புவனம் என்ற ஊரில் வசித்தாள். அங்குள்ள பூவன நாதர் அவளது இஷ்ட தெய்வம். அவரது ஆலயத்தில் சேவை செய்தது மட்டுமின்றி, ஆலயத்துக்கு வரும் சிவனடியார்களுக்கு, தான்  ஆடிப்பிழைக்கும் பணத்தில் மிச்சம் பிடித்து அவர் களுக்கு உணவளிக்கும் பழக்கத்தை யும் கொண்டிருந்தாள். அவளது கண்ணீருக்கு காரணம் தெரிய வேண்டுமே. அவளுக்கு நீண்ட நாளாக ஒரு ஆசை. திருப்புவனநாதர் லிங்கவடிவில் காட்சியளிக்கிறார். அவருக்கு உற்சவர் சிலை இருந்தால், அதைக்கொண்டு திருவிழா நடத்தலாம்.  திருவிழா நடந்தால், மக்கள் கூட்டம் கூட்டமாக தங்கள் ஊர் நோக்கி வருவார்கள். கோயிலின் வருமானம் பெருகும். கோயில் விருத்தியாகும். ஆனால், சிலை செய்ய யார் முன்வருவார்கள்? தானே செய்யலாம் என்றால் அதற்கு அந்தளவுக்கு பணமில்லையே! என்ன செய்வது? இதை நினைத்து நினைத்து கண்ணீர் வடித்தபடியே, தன்னையறி யாமல் உறங்கி விடுவாள். நடனமாடும் நேரத்தில் கூட, இந்த சிந்தனை அவளை வாட்டிக் கொண்டிருந்தது.

ஒருநாள், அவளது ஊருக்கு சில சிவனடியார்கள் வந்தனர். அவர்களை தனது இல்லத்துக்கு வரும்படி அழைப்பு விடுத்தாள் பொன்னனையாள். அடியார்களும், அவளது  பக்தியைப் பற்றி ஊரார் சொல்லக் கேள்விப் பட்டு, அவளது இல்லத்துக்கு சென்றனர். அங்கு அனைவருக்கும் உணவு படைத்தாள். சம்பாதிக்கும் பணமெல்லாம், அடியவர்களுக்கு உணவளிப்பதிலேயே செலவழித்து விடுவாள். அவர்கள் சாப்பிட்டது போக மீதமிருந்தால், அதை மட்டுமே சாப்பிடுவது பொன்னனை யாளின் வழக்கம்.அன்று வந்திருந்த அடியவர் களில் ஒரு அடியவர் மிகுந்த தேஜஸுடன் இருந்தார். அவரது அழகை வர்ணிக்க வார்த்தைகள் இல்லை. பொன்னனையாளுக்கு உதவியாக  இருந்த மற்ற கணிகைகளும், அவளுடன் இணைந்து அடியவர்களுக்கு உணவு பரிமாறினர். அழகாக இருந்த அடியவர் மட்டும் சாப்பிடாமல் அமர்ந்திருந்தார். அதற்கான காரணம் புரியாத கணிகைகள், பொன்னனையாளிடம் அதுபற்றிக் கூறினர். பொன்னனையாள் அவரருகில் சென்று, சுவாமி! மற்றவர்கள் நான் அளித்த இந்த எளிய உணவை சாப்பிடும்போது, தாங்கள் மட்டும் சாப்பிடாமல் இருக்கிறீர்களே! உணவு சுவையாக இல்லையா? தங்களுக்கு வேறு ஏதாவது கொண்டு வர வேண்டுமா? தாங்கள் கேட்பதை நொடியில் சமைத்து தருகிறேன், என்றதும், அந்த அடியவர் சிரித்தார்.

அவரது சிரிப்பில் சொக்கிப் போனாள் பொன்னனையாள். அவரது சிரிப்பு அந்த இடத்தையே ஆனந்தமயமாக்கியது. அம்மையே! உலகுக்கே படியளக்கும் எனக்கு, நீ இன்று படியளந்திருக்கிறாய். அதை நினைத்தேன், சிரித்தேன், என்ற அடியவரின் பேச்சில் இருந்த சூட்சுமம், பொன்னனையாளுக்கு  புரியவில்லை. உடனே அடியவர்  அவளிடம், வருந்தாதே, மகளே! நீ தந்த உணவின் மணம் என்னைச் சாப்பிடத் தூண்டுகிறது. ஆனால், உணவளிக்கும் போது, பெண்கள் மகிழ்ச்சியான மனநிலையைக்காட்ட வேண்டும். அது முகத்தில் எதிரொளிக்க வேண்டும். உன் முகத்தில் ஏதோ வாட்டம் தெரிந்தது. ஏதோ, சோகத்தை மனதில் தாங்கிய நீ தரும் உணவை எப்படி என்னால் மகிழ்ச்சியுடன் சாப்பிட முடியும். நான் சொல்வது சரிதானே! உன் மனதை ஏதோ ஒரு கவலை வாட்டுகிறது என்பது உண்மை தானே! என்றதும், அவளது கண்களில் கண்ணீர் வைகை நதியின் கரை புரண்ட வெள்ளம் போல் பெருகியது. ஐயனே! தாங்கள் என் மன நிலையைப் புரிந்து கொண்டீர்கள். ஆனால், இந்த வருத்தம் என் சுயநலம் கருதியது அல்ல. எம்பெருமானுக்கு, ஒரு சிலை வடிக்க வேண்டும். அதைக் கொண்டு உற்சவம் நடத்தி, மக்களை எனது ஊருக்கு ஈர்க்க வேண்டும். இங்கிருக்கும் பூவனநாதர் கோயில் பெரிய அளவுக்கு உயர வேண்டும்.

மன்னாதிமன்னர்களும், பிரபுக்களும் இங்கு வந்தார்கள் என்றால், அவர்கள் தரும் நன்கொடையைக் கொண்டு கோயிலை பெரிதாக்குவேன். உற்சவர் சிலையை வடித்து முடிப்பேன். இதெல்லாம், எப்படி நடக்கப் போகிறதோ என்ற கவலை தான், என் முகவாட்டத்துக்கு காரணம். இருப்பினும், தங்கள் முன்னால் கனிந்த முகம் காட்டாமைக்கு வருந்துகிறேன். அடியவர், இந்தச் சிறியவளின் தவறை புறந்தள்ளி, அமுது செய்ய வேண்டும், என அவரது பாதத்தில் விழுந்து வேண்டினாள். அடியவர் அவளைத் தேற்றினாள். அவளது விருப்பம் அவரை மிகவும் கவர்ந்தது. அவர் அவளிடம், மகளே! கலங்காதே. உன் விருப்பம் விரைவில் நிறை வேறும். உன் வீட்டிலுள்ள பாத்திரங்களை எடுத்து வா. சிலைசெய்ய நான் வகை செய்கிறேன், என்றார்.அவள் அந்த சோகத்திலும் நகைத்தாள். சுவாமி! என்னிடம் பித்தளையும், செம்பும், சிறு வெள்ளி பாத்திரமுமே உள்ளன. இதை விற்றால் வெற்றிலை வாங்கக்கூட பணம் கிடைக்காதே, என்றாள். மகளே! நான் சொல்வது உனக்குப் புரியவில்லை. பாத்திரங்களை என் முன்னால் எடுத்து வை. நான் அவற்றில் திருநீறு தூவுகிறேன். இன்றிரவு, அவற்றை தீ மூட்டி அதற்குள் தூக்கிப் போடு. அவை  அனைத்தும் என்ன எடை இருக்கிறதோ, அதில் பாதியளவுக்கு தங்கமாக மாறிவிடும். அதைக் கொண்டு நீ சிலை செய்து விடலாம். சாதாரண சிலை வடிக்க இருந்த நீ, உன் பெயரிலுள்ள பொன்னைப் போல, பொன்னாலேயே சிலை வடித்து விடலாம், என்றார். அடியவரின் வாக்கை சிவவாக்காக கருதிய பொன்னனையாள், பாத்திரங்களை எடுத்து வைத்தாள். அவர் திருநீறைத் தூவினார். அவள் அடியவரிடம், சுவாமி! தாங்கள் இன்று இரவு என் வீட்டிலேயே தங்க வேண்டும். பாத்திரங்களை நெருப்பில் போடும்போது, நீங்களும் அருகில் இருந்தால் நன்றாக இருக்கும், என்றாள். தாதியின் பேச்சை மறுத்த அடியவர், அம்மா! சிவனடியார்கள் யார் வீட்டிலும் இரவு நேரத்தில் தங்குவதில்லை. நான் மதுரைக்கு புறப்படுகிறேன். அங்குள்ள ஆலயத்தில், சோமசுந்தரக் கடவுளின் பிரகாரத்தில் தங்கியிருப்பேன். உனக்கு ஏதாவது வேண்டுமென்றால் அங்கு வா, எனச் சொல்லி கிளம்பி விட்டார். பொன்னனையாள் அன்றிரவில் பாத்திரங்களை நெருப்பில் போட்டாள். என்ன ஆச்சரியம்!                                                       ****************

தீயிலிட்ட பாத்திரங்கள் உருகி பொன் மட்டும் வெளிப்பட்டது. தீ அணைந்ததும், பொன்னை வாரி எடுத்த பொன்னனையாள், அதை ஒரு சிறந்த சிற்பியிடம் ஒப்படைத்து,சிவனின் உற்சவர் சிலையை வடிக்கச் சொன்னாள். அந்தச்சிற்பியும் அழகிய சிலை வடிவமைத்தார். அதைப் பார்த்த அவளது கண்களில் ஆனந்தக்கண்ணீர் ஆறாய்ப்பெருகியது. சிலையின் அழகில் சொக்கிப்போன அவள், அதன் மேல் ஆசை கொண்டவளாய், சிலையில் கன்னத்தில் கிள்ளி முத்தமிட்டாள். தன் வீட்டுக்கு வந்து, இந்த அதிசயம் நிகழக்காரணமாக இருந்த சிவனடியாரிடம் சிலையைக் காட்டுவதற்காக எடுத்துக்கொண்டு, மதுரை சென்றாள். இதனிடையே மதுரைக்கு வந்த அந்த அடியவர்,நகர வீதிகளில் அலைந்து திரிந்தார். அப்போது, அவர் ஒரு ஆணை பெண்ணாக்கினார். ஒரு முதியவரை இளைஞனாக்கினார். இரும்பை தங்கமாக்கினார். பிறவியிலேயே பேசாத ஒருவனை பேச வைத்தார். ஊசியை தரையில் நிறுத்தி, அதன் மேல் கால் கட்டை விரலை வைத்து நடனமாடினார். இவரது சித்து வேலைகளால் மக்கள் கவரப்பட்டனர். ஊரெங்கும் இவரைப் பற்றி எழுந்த பேச்சு, அப்போது மதுரையை ஆண்ட அபிஷேகப் பாண்டியனையும் எட்டியது. சித்தரை அழைத்து வர ஆட்களை அனுப்பி வைத்தான்.  என்னைப் பார்க்க வேண்டுமானால், உன் மன்னனை இங்கே வரச்சொல், என சொல்லிவிட்டார் சித்தர்.

மன்னனும் வந்து பார்த்தான். அவரைப் பற்றி அவன் அவரிடமே கேட்டான். என்னை எல்லாம் வல்ல சித்தர் என்று நீ அழைக்கலாம். நானே ஆதியும், அந்தமும் ஆவேன்,என்றார். சித்தரே! உம் சித்து வேலைகளை ஒப்புக் கொள்கிறேன். அதற்காக நீரே கடவுள் என்பதைப் போல் பேசுகிறீரே! எங்கே! இந்தக் கோயிலில் இருக்கும் கல்லால் செய்யப்பட்ட இந்த யானை, உம் சக்தியால் கரும்பு தின்னுமா? என்று கேட்டான். ஒரு கட்டு கரும்பை வரவழைக்கச் சொன்னார் சித்தர். கல்யானையின் முன்னால் போட்டார். சாப்பிடு என கண்ஜாடை காட்டினார். அம்மட்டிலே அது உயிர் பெற்று எழுந்து சாப்பிட ஆரம்பித்து விட்டது. மன்னன் சித்தரின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டான். அவனுக்கு புத்திர பாக்கியம் இல்லை. சித்தரிடம் தன் குறையைச் சொன்னான். அடுத்த ஆண்டிலேயே ஒரு ஆண் குழந்தைக்கு தந்தையானான். இப்படி பல  அதிசயங்களை நிகழ்த்திக் கொண்டிருந்த சித்தரைக் காண வந்த பொன்னனையாள், மீனாட்சியையும், சுந்தரேஸ்வரரையும் வணங்கி விட்டு, பிரகாரத்தில் இருப்பதாகச் சொன்ன அடியவரை  தேடி அலைந்தாள். 

துர்க்கை சன்னதி அருகில், ஒரு பெரியவர் அமர்ந்திருந்தார். அவரை உற்று நோக்கிய போது, அவள் வீட்டுக்கு வந்த அடியவர் தான் என்பதில் சந்தேகமில்லாமல் போயிற்று. அவரை வணங்கிய அவள், சுவாமி! என்னை நினைவிருக்கிறதா? தாங்கள், சில மாதங்களுக்கு முன் என் வீட்டுக்கு அமுதுண்ண வந்திருந்தீர்கள். அப்போது, சிவனின் சிலை செய்யும் என் லட்சியத்தை வெளியிட்டேன். ஞாபகப் படுத்திப் பாருங்கள், என்றாள். ஓ! பொன்னனையாளா? நலமாக இருக்கிறாயா? உன் ஆசை பூர்த்தியாகி விட்டதா? என்றார் ஏதுமறியாதவர் போல.அவள் அந்தச்சிலையை அவர் முன்னால் எடுத்து வைத்தாள். பார்த்தாயா! நம்பிக்கையே வாழ்வின் அஸ்திவாரம். நீ, நான் சொன்னதை நம்பி பாத்திரங்களை தீயில் இட்டிருக்கிறாய். நினைத்ததை சாதித்து விட்டாய், என்றதும், சுவாமி, தாங்கள் யார்? தங்கள் பெயர் என்ன? தாங்கள் துறவு மேற்கொண்ட கதையை எனக்குச் சொல்ல வேண்டும், என்றாள் பொன்னனையாள். பெரியவர் சிரித்தார். எனக்கு ஆயிரம் பெயர்கள் இருக்கிறது தாயே! ஒவ்வொருவரும்  ஒவ்வொரு மாதிரியாக அழைப்பார்கள். சிலர் சிவனே என்பார்கள். சிலர் பரமசிவா என கூப்பிடுவார்கள். இருந்தாலும், இந்தக் கோயிலில் உள்ளவர்கள் சுந்தரேசா என்பார்கள். ஆனால், இந்த எளிய மானிடன் தனக்குத்தானே சூட்டிக்கொண்ட பெயர் வல்லபன்,என்றார். அவள் அவரது பாதத்தை மீண்டும் நமஸ்கரித்து, அவரைச் சுற்றிலும் தான் கொண்டு வந்த பூக்களால் பந்தல் போல் அலங்கரித்தாள். அந்த சமயத்தில், அவர் தியானத்தில் இருந்தார். நீண்டநேரம் அப்படியே இருக்கவே, அவரிடம் விடை பெறுவதற்காக, தியானத்தைக் கலைக்க முற்பட்டாள் பொன்னனையாள். ஆனால், அவர் எழவே இல்லை. அப்படியே கற்சிலையாக மாறி விட்டார். அவள் அழுது தீர்த்தாள்.

சுவாமி! தங்களை வணங்க வந்தேன். தங்களையே எங்கள் ஊருக்கு அழைத்துச் சென்று, இச் சிலையை பிரதிஷ்டை செய்ய எண்ணியிருந்தேன். தாங்களோ கல்லாய் சமைந்து விட்டீர்களே! இனி,நான் என்ன செய்வேன்? என அவர் மீது விழுந்து கதறினாள். அப்போது அசரீரி ஒலித்தது. மகளே! கலங்காதே. உன் வீட்டுக்கு வந்த நானே சிவன். சித்தராய், இப்பூவுலகில் அமர்ந்து கருணை செய்யவே வந்தேன். மதுரையம்பதியில், நான் இதே பிரகாரத்தில் சித்தராய் இருப்பேன். எனக்கு நீ பூப்பந்தல் இட்டு அலங்காரம் செய்ததைப் போல், யாரெல்லாம் எனக்கு பூப்பந்தல் வழிபாடு செய்கின்றனரோ, அவர்களுக்கெல்லாம் நடக்காது என ஒதுக்கி வைத்த செயல் களைக் கூட வெற்றிகரமாக நிறைவேற்றித் தருவேன், என்றது. மதுரை மீனாட்சியம்மன் கோயில் செல்பவர்கள் சுவாமி பிரகாரத்தில், துர்க்கை சன்னதியை ஒட்டியுள்ள வல்லப சித்தரை தரிசிக்கலாம். சன்னதியில் தியானகோலத்தில் இவர் அமர்ந்திருப்பார். இப்போதும் பூப்பந்தல் வழிபாடு நடக்கிறது. பூக்கூடார வழிபாடு என்று இப்போது சொல்கிறார்கள்.  இவருக்கு வல்லபசித்தர் என்ற பெயர் தவிர சிவசித்தர், சுந்தரானந்தர் என்ற பெயர்களும் உண்டு. குழந்தையில்லாத பெண்களும், கணவனைப் பிரிந்திருக்கும்  பெண்களும், கல்வியில் முதல்நிலைக்கு வர வேண்டும் என விரும்பும் மாணவர்களும் இந்த சித்தரை வணங்கி பூக்கூடாரமிட்டு வழிபட்டால், நினைத்தது நிறைவேறும். அடுத்து நாம் அகத்திய சித்தரை தரிசிப்போம்.

அகத்தியர்

தேவர்கள் அனைவரும் இந்திரனின் முன்னால் போய் நின்றனர். தேவாதி தேவ! உலகில் அநியாயம் பெருத்து விட்டது. அரக்கர்களின் அட்டகாசத்தால், எவ்வுலகிலும் பக்தர்களால் யாகம், பூஜை, புனஸ்காரங்கள் செய்ய முடியவில்லை. எங்களுடைய அவிர்ப்பாகம் கிடைக்காததால், நாங்கள் படும் வேதனைக்கு எல்லையில்லை. எங்கள் சக்தி குறைந்து, அசுரசக்தி வேகமாகத் தலைதூக்குகிறது. நல்லவர்கள் நிம்மதியின்றி உள்ளனர். கெட்டவர்களோ, அந்த ராட்சஷர்களுடன் கைகோர்த்து சுகபோக வாழ்வு நடத்துகின்றனர். கெட்டவர்களின் தரம் உயர்ந்தால், நல்லவர்களும் நம் மீதான நம்பிக்கையை இழந்தல்லவா விடுவார்கள். தேவர் தலைவனே! தாங்கள் தான் எங்களைக் காத்தருள வேண்டும், என்றனர். இந்திரன் தேவர்களின் குறையை கருணையுடன் கேட்டான். தேவர்களே! கலங்க வேண்டாம். தேவராயினும், மனிதராயினும், சிறு பூச்சி புழுவாயினும், அவரவர் செய்த பாவ புண்ணியங்களுக் கேற்ப பலன்களை அனுபவித்தே தீர வேண்டும். எனினும், இதுகண்டு நீங்கள் அஞ்சத் தேவையில்லை. அசுரர்களில் உயர்ந்தவனான தாரகன் தவவலிமை மிக்கவன். கடலுக்குள் மறைந்து வாழும் சக்தி படைத்தவன். பிரம்மாவின் அருளால் சாகாவரம் பெற்றவன். ஒரு கும்பத்தின் அளவே உருவமுடைய ஒருவரே அவனைக் கொல்ல முடியும். ஆனால், அவன் குறிப் பிட்டுள்ள அளவு உயரமுள்ளவர் எவரும் பூவுலகில் இல்லை. பிரம்மனால் கூட அப்படிப்பட்டவரைப் படைக்க முடியாது. இருப்பினும், பிறந்தவர் மாள்வது உறுதி. நீங்கள் அமைதி காக்க வேண்டும். நான் அவர்களை கடலுக்குள் வசிக்க இயலாத அளவுக்குரிய ஏற்பாடுகளைச் செய்து வருகிறேன். பின்னர், அவர்களது தொந்தரவு குறையும், என்றான்.

தேவர்கள் அரைகுறை மனதுடன் தங்கள் இருப்பிடங்களுக்கு திரும்பினர். இந்திரன் ஆழ்ந்து யோசித்தான். கடலை வற்றச்செய்வது என்பது எப்படி ஆகக்கூடிய காரியம். என்ன செய்வது? என குழம்பிப் போயிருந்த வேளையில், அதுவே சரி, என ஒரு திட்டத்தை வகுத்துக் கொண்டான். அக்னிதேவனை தன் சபைக்கு வரச்செய்தான். அக்னி! நீ உடனே பூலோகத் துக்குச் செல். கடலுக்குள் அரக்கர்கள் ஒளிந்து கிடந்து நம் இனத்தாரை துன் புறுத்துகின்றனர். நீ கடலே வற்றும்படியாக வெப்பத்தை உமிழ். கடல் காய்ந்து போனதும், அரக்கர்கள் நம்மை துன்புறுத்தி விட்டு, ஓடி ஒளிய இடம் இல்லாமல் தவிப்பர். இதைப்பயன்படுத்தி அவர்களைக் கொல்ல ஏற்பாடு செய்வோம்,  என்றான். அக்னி சிரித்தான். இந்திரரே! தங்கள் யோசனை எனக்கு நகைப்பை வரவழைக்கிறது. அரக்கர்களை அழிப்பதே தேவர் களையும், பூலோக மக்களையும் காப்பாற்ற வேண்டும் என்பதற்காகத் தான். உலகில் கடல் இல்லை என்றால் மழை எப்படி பொழியும்? மழை இல்லை என்றால் ஆறுகள் எப்படி ஓடும்? ஆறுகள் இல்லையென்றால், நமக்கு அவிர்பாகம் தரும் யாகங்களை நடத்த தீர்த்தம் கூட இல்லாமல் போய் விடுமே. நீர் வாயுவை அழைத்துப் பேசும். ஒருவேளை வறண்ட காற்றால் அவன்  கடலை வற்றச்செய்யக்கூடும், என்றான்.

இந்திரனுக்கு கோபம் வந்துவிட்டது. ஏ அக்னி! நான் இட்ட வேலையைச் செய்யும் வேலைக் காரன் நீ. தலைவனாகிய என்னையே எதிர்த்துப் பேசுகிறாயா?இந்த யோசனை யெல்லாம் இல்லாமலா நான் உன்னை கடலை வற்றச்செய்யும்படி பணிப்பேன். சொன்னதைச் செய்,என்றான்.அக்னியோ ஒரேயடியாக மறுத்து விட்டான். தாங்கள் என் எஜமானர் தான். எஜமானர் என்பதற்காக, அந்த எஜமானர் உள்ளிட்ட அத்தனை பேரையும் அழிக்கும் பாவத்தை நான் செய்ய மாட்டேன், எனச் சொல்லி விட்டு,கைகட்டி நின்றான். அடுத்து வாயு வரவழைக்கப் பட்டான். அவனிடமும் இந்திரன், கடல் சமாச்சாரம் பற்றிக் கூற, வாயுவும், அக்னி சொன்ன அதே பதிலையே சொன்னான். அக்னியும், வாயுவும் சொல்வதிலும் நியாயமிருக்குமோ என்னும் அளவுக்கு இந்திரனும் சிந்திக்க ஆரம்பித்து விட்டான். அத்திட்டத்தை கைவிட்டு, அவர்களை அனுப்பி விட்டான். ஆனால், சில நாட்களில் அரக்கர்களின் அட்டகாசம் அதிகரித்து, யாகங்கள் முழுமையாக நின்று போயின. யாக குண்டங்களில் அசுரர்கள் மாமிசத்தையும், ரத்த மழையையும் பொழிந்து தீட்டை உண்டாக்கினர். எந்த யாகமும் நடைபெறாமல் தேவர்கள் மெலிந்து போயினர். இப்போது, இந்திரனின் கோபம் அக்னி மற்றும் வாயுவின் மீதே திரும்பியது.

மீண்டும் அவர்களை வரவழைத்து, ஏ அக்னி! ஏ வாயு! அன்று நான் சொன்னதை நீங்கள் செய்யாமல் போனதால், அரக்கர்கள் தங்கள் அட்டகாசத்தை முடித்து விட்டு,  கடலுக்குள் போய் ஒளிந்து கொள்கின்றனர். கடலுக்குள் மறைந்திருப்பவர்களை யாரால் கண்டுபிடிக்க இயலும்? அவர்களைக் கொல்வதென்பது எப்படி சாத்தியம்? என் சொல்லைக் கேளாததால் ஏற்பட்ட துன்பத்தின் பலனை அனுபவிக்கும் வகையில், நீங்கள் பூலோகத்தில் பிறந்து மனிதர்கள் படும் வேதனையை அனுபவிக்க வேண்டும், என சாபமிட்டான். அக்னியும், வாயுவும் பூலோகத்தில் பிறந்தனர். அக்னி மித்திரா என்ற பெயரிலும், வாயு வருணர் என்ற பெயரிலும் வாழ்ந்தனர். இச்சமயம், தேவலோக மங்கையான ஊர்வசி, தான் செய்த தவறால், இந்திரனின் சாபம் பெற்று பூலோகம் வந்தாள். அவள், ஒரு நீர்நிலையில் நீராடிக் கொண்டிருந்த போது, அவளை மித்திராவும், வருணனும் பார்த்தனர். அப்படி ஒரு பேரழகியை அவர்கள் கண்டதே இல்லை. அப்போது, அவர்களிடம் இருந்து வீரியம் வெளிப்பட்டது. மித்திரர் தன் கையில் இருந்தகும்பத்தில் வீரியத்தை இட்டார். வருணரோ, அதைத் தண்ணீரில் இட்டார். கும்பத்தில் இருந்த வீரியம் வளர்ந்து ஒரு குழந்தையாக மாறியது. அது சில நாட்களில் கும்பத்தில் இருந்து வெளிப்பட்டு உயிர் பெற்று நடமாடியது. அந்த உருவம் கமண்டலம், ஜடாமுடியுடன் தோற்றமளித்தது. ************* 

குடத்தில் இருந்து பிறந்ததால், அந்த குள்ள முனிவருக்கு கும்பமுனிவர் என்றும், குடமுனிவர் என்றும் தேவர்கள் அழைக்கலாயினர். அரக்கர்களைக் கொல்ல கும்ப அளவே உயரமுள்ள ஒரு முனிவர் பிறந்து விட்டதில் அவர்களுக்கு பெரும் மகிழ்ச்சி. இது ஒருபுறம் இருக்க, வாயுபகவான், தண்ணீரில் இட்ட வீரியத்தில் இருந்து வசிஷ்டர் பிறந்தார். இவர் அயோத்தியை நோக்கி போய் விட்டார். பிற்காலத்தில், இவர் மகாவிஷ்ணுவின் அவதாரமான ராமருடன் சேவை செய்ய  வேண்டியிருந்ததைக் கருத்தில்  கொண்டு அங்கு சென்று விட்டார். கும்பமுனி உருவத்தில் தான் குள்ளம். ஆனால், அவரது சக்தியோ எல்லை மீறியதாக இருந்தது. அக்னியில் இருந்து பிறந்தவர் என்பதால், இவர் உடலில் வெப்பம் தகித்தது. தன் வெப்பத்தை தணிக்க தண்ணீரின் மீதே படுத்திருப்பார். அவரிடம், தேவர்கள் தங்கள் குறையை வெளியிட்டனர். சுவாமி! தங்களால் மட்டுமே அரக்கர்களை அழித்து எங்களைக் காக்க முடியும், என்றனர்.அகத்தியர் அவர்களுக்கு அருள் செய்வதாக வாக்களித்தார். தேவர்களைக்காக்கும் தனது கடமை தடங்கலின்றி நிறைவேற, தனக்கு வசதியான தண்ணீரிலேயே தவத்தை துவங்கினார். 12 ஆண்டுகள் தொடர்ந்து தண்ணீரில் படுத்த படியே இறைவனை தியானித்தார். இறைவன் அருளும் கிடைத்தது.

அரக்கர்களை சம்ஹாரம் செய்ய அவர்கள் மறைந்திருந்த கடலை நோக்கிச் சென்றார். தங்களை குள்ள முனிவர் ஒருவர் கொல்ல வந்துள்ளார் என்பதை அறிந்த அரக்கர்கள்  தண்ணீரை விட்டு வெளியே வரவே இல்லை. ஆனால், அகத்தியர் விடுவாரா என்ன? தண்ணீர் முழுவதையும், தன் உள்ளங்கைக்குள் அடக்கி சித்து விளையாட்டு செய்தார்.  ஒட்டுமொத்த கடல் நீரும் அவர் கைக்குள் வந்தது. தீர்த்தம் குடிப்பது போல் குடித்து விட்டார். இதைப் பயன்படுத்திக் கொண்ட தேவர்கள், அசுரர்கள் மீது பாய்ந்தனர். இரு தரப்புக்கும் கடும் சண்டை நடந்தது. முடிவில், அரக்கர்கள் கொல்லப்பட்டனர். கடலையே சுருக்கி சாப்பிட்டவர் என்றால் சும்மாவா? மேலும், உலகையே காக்க வேண்டிய  தேவர்களையே பாதுகாத்தவர் என்றால் அவரது சக்தி எத்தகையதாக இருக்கும்? அந்த மாமுனிவர், தான் வந்த வேலையை அத்துடன்  முடித்துக் கொள்ள வில்லை. மகாவிஷ்ணு அப்போது மனித அவதாரமான ராமாவதாரம் எடுத்து இலங்கையிலே இருந்தார். ராமனின் மனைவியான சீதாவை, அந்நாட்டு அரக்க அரசனான ராவணன்  தூக்கிச் சென்று விட்டான். அவளை மீட்பதற்காக பெரும்படையுடன் சென்றிருந்தும் கூட, அவரால் ராவணனை அவ்வளவு எளிதில் ஜெயிக்க முடியவில்லை. அங்கு சென்ற அகத்தியர், ராமனிடம் சூரிய வழிபாடு செய்வதன் மூலம் பெரும் பலம் பெறலாம் எனக்கூறி, ஆதித்ய ஹ்ருதயம் என்னும் ஸ்லோகங்களைப் போதித்தார். மேலும்  அவருக்கு சிவகீதையையும் கற்றுத் தந்தார்.

ராமபிரானின் இலங்கை வெற்றிக்கு முக்கிய காரணகர்த்தாக் களில் அகத்தியரும் ஒருவர். பின்னர் அங்கிருந்து புறப்பட்டு இமயமலைச் சாரலுக்கு வந்தார். அப்பகுதியில் தவமிருந்தார். ஒருமுறை, இந்திரத்துய்மன் என்ற அரசன் ஆண்ட நாட்டுக்குச் சென்றார். அவன் அகத்தியரின் மகிமை அறியாமல் உரிய மரியாதை கொடுக்கவில்லை. பெரியவர்களுக்கும்,  முனிவர்களுக்கும் மரியாதை கொடுக்காதவன் அரசாளத் தகுதியில்லாதவன் என்று கூறிய அவர், நீ யானையாகப் போ என சாபம் கொடுத்தார். அவன் வருந்தி அழுதான். கருணைக்கடலான அகத்தியர், மன்னா! நீ பக்தன் தான். யோகங்களில் தலை சிறந்தவன். ஆனால், மமதை என்னும் மதம் உன்னை ஆட்டிப் படைக்கிறது. அதன் காரணமாகவே, உன்னை மதம் பிடித்த யானையாக மாற்றி விட்டேன். இதுவும் நன்மைக்காகவே நடந்தது, என்றார். இதனால் எனக்கு என்ன நன்மை கிடைக்கும் சுவாமி? என் மனைவி, மக்கள் என் பிரிவால் துன்புறுவார்களே! என கேட்ட போது, மோட்சம் செல்லப் போகிறவன், சம்சார பந்தத்தை துறக்க வேண்டும். நீ சாட்சாத் மகாவிஷ்ணுவின் மூலம் சாபவிமோசனம் பெற்று வைகுண்டம் சேர்வாய். பிறப்பற்ற நிலை சித்திக்கும், என அருள் செய்தார்.

பிறவித்துன்பத்தில் இருந்து விடுதலை கிடைக்கும் என்றால், யானையாகத் திரிவதில் தனக்கு சம்மதமே என்ற இந்திரத்துய்மன், காட்டில் அலைந்து திரிந்தான். பின்னர், முதலை ஒன்று அதன் காலைக் கவ்வ, அது ஆதிமூலமே என அலற, ஆதிமூலமாகிய மகாவிஷ்ணு அதனைக் காப்பாற்றி வைகுண்டம் சென்று சேர்த்தார். இப்படி  ஆடம்பரத்தில் சிக்கித் திளைத்த அரசர்களுக்கு வைகுண்ட பிராப்தி அளிப்பவராகவும் அகத்தியர் விளங்கினார். சிவசிந்தனை தவிர வேறு ஏதும் அறியாத அகத்தியர்,  தவத்திலேயே ஈடுபட்டிருந்தார். இமயமலையில், பார்வதி, பரமேஸ்வரனுக்கு திருமணம் நடக்க இருந்த வேளையில், உலகை சமநிலைப்படுத்த அகத்தியரை பொதிகை  மலைக்கு அனுப்பி வைத்தார் சிவபெருமான். அவர் அங்கிருந்து புறப்பட்டு வரும் வழயில், ஒரு மரத்தில் சிலர் தலைகீழாகத் தொங்குவதைப் பார்த்தார். அவர்கள்  அகத்தியா! அகத்தியா! என கத்தினர். நீங்களெல்லாம் யார்? என் பெயர் உங்களுக்கு எப்படி தெரியும்? நான் தவவலிமை மிக்கவன். அக்னி- ஊர்வசி புத்திரன். என்னை  வடபுலத்தோர் மட்டுமே அறிவார்கள். தென்திசையிலுள்ள உங்களுக்கு என் பெயர் எப்படி தெரிந்தது? என்னிலும் வலிமை மிக்கவர்களாகத் திகழ்கிறீர்களே! உங்கள் தரிசனம் கிடைத்ததில் மகிழ்ச்சியடைகிறேன், என்ற அகத்தியர் அவர்களை தன்னையறியாமல் வணங்கினார். அகத்தியா! நீ சொன்ன தெல்லாம் சரிதான். நாங்கள் உன் முன்னோர்கள். உன்னைப் போலவே தவவாழ்வு வாழ்ந்தவர்கள். இருப்பினும், எங்களால் சுவர்க்கத்தை அடைய முடியவில்லை.  சொர்க்கம் செல்ல துறவறம் மட்டுமே உதவாது. இல்லறத்துக்கு பிறகே துறவறம் பூண வேண்டும். யார் ஒருவருக்கு ஆண் குழந்தை இல்லையோ, அவர்கள் பிதுர்களின் உலகை அடைய முடியாது. ஆண் குழந்தையே கொள்ளி வைக்க தகுதியானவன். அதனால் எங்கள் அன்பு மகனே! நீ திருமணம் செய்து கொள். ஒரு மகனைப் பெறு. அவன் மூலமாக எங்களுக் குரிய தர்ப்பணம், சிரார்த்தம் செய்து எங்களுக்கு சொர்க்கப்பாதையைக் காட்டு. இல்லாவிட்டால், நாங்கள் இந்த மரத்திலேயே தொங்க வேண்டியது தான், எனக் கூறி வருந்தினர். உயரத்தில் குள்ளமான அவருக்கு யார் பெண் தருவார்கள்?  **************

மூர்த்தி சிறிதானாலும் கீர்த்தி பெரிதென்பார்கள் நம்மவர்கள். அதுபோல, அகத்தியர் உயரத்தில் மிகச்சிறியவர் என்றாலும், அவரது மகிமைகளை அறிந்த பெண்மணி ஒருத்தி, நிச்சயம் வாழ்க்கைப்பட்டே தீருவாள். தென்னகம் வரும் வழியில், அவர் விதர்ப்பம் என்ற நாட்டை அடைந்தார். அந்நாட்டு மன்னன் யாகம் ஒன்றை நடத்திக்கொண்டிருந்தான். அதில் பங்கேற்க அகத்தியரை அவன் அழைத்துச் சென்றான். யாகத் தீ கொழுந்து விட்டெரிந்த போது, அதில் இருந்து ஒரு பெண்மணி வெளிப்பட்டாள். அப்போது அசரீரி தோன்றி, அகத்தியரே! நீர் இந்தப்பெண்ணை மணந்து கொள்ளும். இவளது பெயர் உலோபமுத்திரை, என்றது. அகத்தியரும் தெய்வ வாக்கிற்கேற்ப அவளது சம்மதத்தைக் கேட்டார். மாமுனிவரே! நான் இந்நாட்டில் தோன்றியதால், விதர்ப்ப தேசத்தரசரே என்தந்தையாகிறார். அவர் சம்மதம் தெரிவித்தால், நான் உங்கள் மனைவியாகிறேன், என்றாள். விதர்ப்ப அரசனும் சம்மதம் தெரிவித்தான். அப்போது உலோபமுத்திரை, அகத்தியரே! தாங்கள் என்னை மணம் முடிக்க வேண்டிய அவசியத்தை நான் தெரிந்து கொள்ளலாமா? என்றாள்.

லோபா! என் முன்னோர்கள் ஆண் குழந்தை இன்மையால், இறந்தும் திதி செய்ய நாதியின்றி தவிக்கின்றனர். அவர்களால் சுவர்க்கத்தை அடைய முடியவில்லை. நானும் துறவியாகி விட்டதால், அவர்களின் நிலைமை மோசமாகி விட்டது. அவர்களின் ஆத்ம சாந்திக்காக, நான் திருமணம் முடிக்க வேண்டியுள்ளது. பிதுர் தர்ப்பணம் செய்யாதவன் நரகை அடைவான் என்பதை நீ அறிவாய். அவர்களின் விருப்பப்படி, நான் இல்லறத்தில் ஈடுபட்டு, ஒரு மகனை பெற்று, அவன் மூலமாக தர்ப்பணம் செய்ய வேண்டும். அவர்களின் விருப்பத்தை நிறைவேற்றா விட்டால், நான் நரகத்தை அடைவேன் என சாபமும் இட்டுள்ளனர், என்றார். இதைக் கேட்ட விதர்ப்ப மன்னன்,அகத்தியரே! உமக்கு எம் மகளை தருவதற்கில்லை. அப்படி தர வேண்டுமானால், நான் உமக்கு சீதனம் தரமாட்டேன். நீரே நான் கேட்கும் பொருளை எனக்குத் தர வேண்டும், என சொல்லி விட்டான். இதென்ன சோதனை? துறவியிடம் ஏது செல்வம்? இந்த மன்னன் கேட்கும் தொகைக்கு எங்கு போவேன்? என எண்ணிக்கொண்டிருந்த போது, லோபமுத்திரையும், அகத்தியரே! என்ன யோசனை? இப்பூவுலகில் இனிய இல்லறம் நடத்த பொன்னும் பொருளும் தேவை என்பதை நீர் அறிய மாட்டீரா? எனவே மிகப்பெரிய மாளிகை கட்டும் அளவுக்கு இடமும், அதை நிரப்புமளவுக்கு செல்வமும் கொண்டு வந்து என்னை மணம் முடித்துக் கொள்ளும். இல்லாவிட்டால், நீர் நரகம்செல் வதைத் தவிர வேறு வழியில்லை என்பதைப் புரிந்து கொள்ளும், என்றார்.

ஒரு பெண் தன்னை மணம் முடிக்க சம்மதித்ததே பெரிய விஷயம் என்ற முறையில், அகத்தியர் பலநாட்டு மன்னர்களையும் சந்தித்தார். அவர்களிடம் பொருளை யாசித்து பெற்றார். லோபமுத்திரை கேட்ட அளவுக்கு பொன்னும், பொருளும் கிடைத்தது. அதை அவளிடம் தந்து அவளைத் திருமணம் செய்து ஒரு மகனைப் பெற்றார். முன்னோர்கள் சாபம் நீங்கி அவரை வாழ்த்தினர். தன் மனைவி லோபமுத்திரையிடம், அடங்காமல் பிரவாகம் எடுத்த நதிபோல், என்னை ஆட்டி வைத்தவளே! இனி, நீ எனக்கு அடங்கி நடக்க வேண்டும். எந்தச் செல்வம் உனக்கு அவசியப்பட்டதோ, அந்தச் செல்வம் உலகம் முழுமைக்கும் கிடைக்க வேண்டும். சிவபெருமான் என்னை தென்னகம் சென்று பூமியை சமப்படுத்தச் சொன்னதன் தாத்பர்யம் உனக்குத் தெரியுமா? இந்த உலகத்தை அவரது பாதத்தால் ஓர் அழுத்து அழுத்தினால், அது சரியாகி  விடும்.ஏனெனில், இந்த பூமி அவருக்கே சொந்தமானது. ஆனால், உலகிலுள்ள உயிர்கள் சமநிலை பெற வேண்டும் என்ற நோக்கத்திலேயே அவர் என்னை அனுப்பி வைத்தார். உலகம் செழிக்க தண்ணீர் தேவை. தண்ணீர் இருந்தால், உலகத்தின் எல்லாப்பகுதியும் தானாக செழித்து விடும். பயிர் பச்சைகள் வளரும். லோபா! நீ என் கமண்டலத்துக்குள் வந்து விடு, எனச்சொல்லி அவர் மீது தீர்த்தம் தெளித்தார். அவள் தண்ணீராக உருமாறி, கமண்டலத்தில் புகுந்தாள். அந்த கமண்டலத்துடன் அவர்  குடகுமலையை அடைந்தார். மலையின் ஓரிடத்தில் தன் கமண்டலத்தை வைத்து விட்டு லிங்கபூஜை செய்து கொண்டிருந்தார். அப்போது, ஒரு காகம் பறந்து வந்தது. கமண்டலத்தை தட்டி விட்டது. கமண்டலம் சரியவே, உள்ளிருந்த தண்ணீர் ஆறாய்பிரவாகம் எடுத்தது.

பெரிய நீர்வீழ்ச்சியாய் அது கொட்டியது. இதை எதிர்பாராத அகத்தியர் கமண்டலத்தில் கொட்டியது போக மீதி தண்ணீரை மீண்டும் பத்திரப் படுத்திக் கொண்டார். பிரவாகம்எடுத்த நதி கடல் போல் பெருகியதால் சிவசமுத்திரம் என சிவனின் பெயரால் அதை அழைத்தார். அது கா என்னும் சோலைகளுக்குள் விரிந்து பரவிச் சென்றதால், காவிரி என்று பெயர் வைத்தார். பின்னர், மீதி தண்ணீருடன் பொதிகை மலைக்கு வந்த அவர், லோபா! நீ நிரந்தரமானவள். என் முன்னோரின் சாபம் தீர்த்த நீ, குடகில் நதியாய் பிராவகம் எடுத்தது போல், இந்த பொதிகையிலும் நதியாகி உலகை செழிப்பாக்கு. செழிப் புள்ள உலகத்தில் வறியவர் இருக்கமாட்டார்கள். வறியவர்இல்லாத பூமியில் சமத்துவமான வாழ்வு கிடைக்கும், என்று கூறி, கமண்டலத்தில் இருந்த மீதி நீரை, பொதிகையின் உச்சத்தில் இருந்த சிகரத்தில் கொட்டினார். அது பளபளவென மின்னியபடியே பாணம் போல வேகமாகப் பாய்ந்து ஒரு அருவியை உருவாக்கியது. அதற்கு பாண தீர்த்தம் என பெயர் வைத்தார். அந்த அருவி ஓரிடத்தில் தேங்கி, நதியாகப் பாய்ந்தது. அப்போது, ஓரிடத்தில் சிவபார்வதி தரிசனம் கிடைத்தது. அதைக் கண்ட  லாபமுத்திரை ஆனந்தமயமாகி மற் றொரு அருவியாய் வீழ்ந்தாள். அதற்கு கல்யாண தீர்த்தம் என பெயர் சூட்டினார் அகத்தியர். மீண்டும் ஓரிடத்தில் பக்தர்கள் நீராடி மகிழ ஒரு நீர்வீழ்ச்சியாய் மாறி, தன் கணவரின் பெயரால் அகத்தியர் தீர்த்தம் என்றே அழைக்கப்பட வேண்டும் என்ற தன் விருப்பத்தை தெரிவித்தாள். இன்றும் அதில் பக்தர்கள் நீராடி மகிழ்கின்றனர். தாமிரபரணி என்னும் பெயர் பெற்று அப்பகுதியை வளப்படுத்தினாள். பின்னர் அகத்தியர் பொதிகையில் தங்கி தமிழுக்கு இலக்கணம் வகுத்தார். உலகை சமநிலையாக்கிய மகிழ்ச்சியில் அங்கிருந்து மலைப்பாதையில் திருவனந்தபுரத்தை அடைந்தார். அங்கே அவர் சமாதி நிலையடைந்தார். அடுத்து போகசித்தரின் வரலாறை தொடங்குவோம்.

 
மேலும் மகான்கள் »
temple

சிவானந்தர் செப்டம்பர் 08,2010

சீரிய வாழ்விலிருந்து......... கொடுத்து மகிழ்பவர் திருநெல்வேலி மாவட்டம் பத்தமடையில் அவதரித்தவர் ... மேலும்
 
temple

மறைஞான சம்பந்தர் செப்டம்பர் 06,2010

மெய்கண்ட (உண்மை) சாத்திரங்கள் என்று போற்றப்படும், சைவசித்தாந்த சாத்திரங்களில் சிவஞானபோதம்  ... மேலும்
 
temple
01.பெயர் : திருநீலகண்டர்பிறந்த ஊர்: சிதம்பரம்பிறந்த மாதம், நட்சத்திரம் : சித்திரை, கார்த்திகைமுக்தி ... மேலும்
 
temple
விருந்தாவனம்...டில்லி அருகிலுள்ள ஒரு கிராமம். இங்கு மட்டும் இப்போது 5 ஆயிரம் கிருஷ்ணர் கோயில்கள் ... மேலும்
 
temple
சத்தியம் தவறாத சுதிராமிற்கு என்ன செய்வதென்றே புரியவில்லை. அவ்வூரில் மிகப்பெரிய ஜமீன்தார் ராமானந்தர். ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Copyright © 2021 www.dinamalar.com. All rights reserved.