பதிவு செய்த நாள்
21
ஜூலை
2015
11:07
பெங்களூரு: கர்நாடகா மாநிலம், பெங்களூரு ராஜராஜேஸ்வரி நகர், ராஜராஜேஸ்வரி கோவில், கைலாச ஆஸ்ரமம், புகழ் பெற்று விளங்குகிறது. இந்த கோவில் அமைந்துள்ள பகுதி பூகோள அடிப்படையில், கர்நாடகத்தின் கிழக்கு, மேற்காக அமைந்து, கல்யாணகிரி என்று அழைக்கப்பட்டது. தென் மேற்கு மூலையில், காவிரி மற்றும் விருஷபாவதி நதிகளுக்கிடையில், ஸ்ரீஸ்ரீஸ்ரீதிருச்சி மகா சுவாமிகள், கைலாச ஆஸ்ரம மகா சமஸ்தானம், ஸ்ரீராஜராஜேஸ்வரி கோவிலை நிர்மாணித்தார். கோவிலில், ஜெயாபீடம் என்ற சக்தி பீடத்தின் மீது, ராஜராஜேஸ்வரி அமர்ந்து அருள்புரிகிறாள். திருச்சி சுவாமிகளின் குருவான ஜெகத்குரு சிவபுரி பாபா, நேபாளம் காத்மாண்டுவில், 137 வயது வரை வாழ்ந்து, கால்நடையாகவே நடந்து, உலகம் முழுவதும் யாத்திரை செய்தவர். இவரது ஆலோசனை படி, 1959ல், திருச்சி மகா சுவாமிகள் இங்கு வந்தார். கடந்த 1986ல், திருச்சி சுவாமிகளை, ஜெயேந்திரபுரி சுவாமிகள் சந்தித்து, தம் குருவாக ஏற்றார். திருச்சி சுவாமிகளின் வாரிசாக தேர்ந்தெடுக்கப்பட்டு, 2003 டிச., 11ம் தேதி பீடாதிபதியானார். கடந்த 2005, ஜன., 14ம் தேதி, திருச்சி சுவாமிகள், மகா சமாதியடைந்த பின், ஜெயேந்திரபுரி மகா சுவாமிகள், ஆச்சார்யா பீடத்தை ஏற்று, ஆஸ்ரம நிர்வாகத்தை வழிநடத்தி வருகிறார். இந்த கோவிலுக்கு, கர்நாடகா மட்டுமின்றி, தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்களிலிருந்து பக்தர்கள் வருகின்றனர்.