பதிவு செய்த நாள்
21
ஜூலை
2015
11:07
திருத்தணி: திருத்தணி படவேட்டம்மன் கோவிலில், ஆடித்திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது.ஐதீகம்திருத்தணி நகராட்சி, மடம் கிராமத்தில், 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த, படவேட்டம் மன் கோவில் உள்ளது. முருகப் பெருமான் சினம் தணிந்து, இக்கோவிலில் உள்ள, படவேட்டம்மனை தரிசித்த பின், மலைக் கோவிலில் அமர்ந்ததாக ஐதீகம். இக்கோவிலில் உள்ள வேப்பமரத்தில், சுயம்பு வடிவில் விநாயகர் தோன்றியுள்ளார். வளைகாப்பு நிகழ்ச்சிஇங்கு, ஆண்டுதோறும் மாசி மாத குத்துவிளக்கு பூஜை; ஆடித்திருவிழா; வரலட்சுமி நோன்பு; நவராத்திரி உற்சவம்; கார்த்திகை தீபம்; தமிழ், ஆங்கில புத்தாண்டு மற்றும் ஆடி மாதம் ஜாத்திரை திருவிழா ஆகியவை விமரிசையாக நடைபெறும். ஜாத்திரை திருவிழாவில், கரக ஊர்வலம், அலகு குத்துதல் பேன்ற வழிபாடுகள் செய்து, பக்தர்கள், அம்மனை வழிப்படுவர். மேலும், கோவிலில் செவ் வாய், வெள்ளி சிறப்பு பூஜைகள், நவராத்திரி உற்சவத்தில், 10 நாட்கள் சிறப்பு ஹோமம், தீபாராதனை ஆகியவை நடைபெறும். ஆடிபூரம் நாளில், மூலவருக்கு வளைகாப்பு நிகழ்ச்சி நடத்தப்படும்.முக்கிய திருவிழாக்களின் போது, காலை, 6:00 மணி முதல் இரவு, 9:00 மணி வரை, கோவில் நடை திறந்திருக்கும். மீதமுள்ள நாட்களில், காலை, 6:00 மணி முதல் மதியம், 12:00 மணி வரையும், மாலை, 4:00 மணி முதல், இரவு, 8:00 மணி வரையும் கோவில் நடை திறந்திருக்கும்.ஆடி ஜாத்திரை திருவிழா, வரலட்சுமி நோன்பு போன்ற விழாக்களை, திருத்தணி நகர தி.மு.க., செயலரும், நகராட்சி கவுன்சிலருமான பூபதி செய்து வருகிறார்.