பதிவு செய்த நாள்
01
ஆக
2015
12:08
ஆத்தூர்:ஆத்தூர், கோட்டை சம்போடை வனத்தில் உள்ள, மதுரகாளியம்மன் கோவிலில், நேற்று, ஆடி வெள்ளியொட்டி திருவிளக்கு பூஜை நடந்தது.ஆத்தூர் நகராட்சி, முதலாவது வார்டு, கோட்டை அகழிமேடு, சம்போடை வனப்பகுதியில், மதுரகாளியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில், நேற்று, ஆடி வெள்ளி முன்னிட்டு, 13ம் ஆண்டு, தீப லட்சுமி திருவிளக்கு பூஜை நடந்தது.காலை, 10 மணியளவில், வலம்புரி விநாயகர், பாலசுப்ரமணியர் ஸ்வாமிக்கு அபிஷேகம், அலங்காரம் நடந்தது.மதியம், 12 மணியளவில், மகா தீபாராதனை, பூச்சொரிதல், வெள்ளி கவசம் சாத்துதல் நடந்தது. இதில், 450 பெண்கள் பங்கேற்று, தீப விளக்கு ஏற்றி வைத்து, வழிபாடு செய்தனர்.மதியம், 1.30 மணியளவில், ஸ்ரீமதுர காளியம்மன் ஸ்வாமி, வெள்ளி கவசம், புஷ்ப அலங்காரத்தில், பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தீபவிளக்கு பூஜையில் பங்கேற்ற பெண்களுக்கு, ஜாக்கெட், வளையல், தாலி கயிறு, மஞ்சள், குங்குமம் உள்ளிட்ட பூஜை பொருட்கள் வழங்கப்பட்டது.தொடர்ந்து, ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்களுக்கு, அன்னதானம் வழங்கப்பட்டது. இந்த பூஜையில், ஆத்தூர் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர்.