பதிவு செய்த நாள்
01
ஆக
2015
12:08
புதுச்சேரி: கோட்டக்குப்பம் அருகே முதியவர் அருள்வாக்கு கூறிய தனியார் இடத்தில், கிராம மக்கள் திரண்டு பள்ளம் தோண்டியதை, போலீசார் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. புதுச்சேரி அடுத்த காலாப்பட்டு மாத்துார் கிராமத்தில் பச்சைவாழியம்மன் கோவில் உள்ளது. நேற்றுமுன்தினம் பவுர்ணமியையொட்டி கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள் வந்திருந்தனர். அப்போது கூட்டத்தில் இருந்த முதியவர் ஓருவர், கோவில் பின்புறத்தில் உள்ள இடத்தில் ஆவுடை ஈசன் சிலை மண்ணில் புதைந்து கிடைக்கிறது, அதை தோண்டினால் ஊருக்கு நல்லது நடக்கும் என கூறியுள்ளார். இத்தகவல் கிராமம் முழுவதும் பரவியதால், அருள்வாக்கு கூறப்பட்ட இடத்தில் பள்ளம் தோண்டி பார்க்க முடிவு செய்தனர். பூஜைகள் முடிந்ததும், மண்ணாங்கட்டி என்பவருக்கு சொந்தமான சவுக்கு தோப்பில் பள்ளம் தோண்டும் பணியில் ஈடுபட்டனர்.அதிர்ச்சியடைந்த மண்ணாங்கட்டி, கோட்டக்குப்பம் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தார். இன்ஸ்பெக்டர் அரிகரன், சப் இன்ஸ்பெக்டர் மகிபாலன் தலைமையிலான போலீசார், பள்ளம் தோண்டும் பணியை தடுத்து நிறுத்தினர். வானுார் வருவாய் துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த வருவாய் துறை அதிகாரிகள், மண்ணிற்கு கீழ் சிலை உள்ளதால் தொல்லியல் துறை மேற்பார்வையில் தோண்ட வேண்டும் என, அறிவுறுத்தினர்.இதனையடுத்து பள்ளம் தோண்டும் பணியை கைவிட்டு அப்பகுதி மக்கள் கலைந்து சென்றனர். முதியவர் அருள்வாக்கை நம்பி, சாமி சிலையை கிராம மக்கள் நான்கு மணி நேரமாக தேடியதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.