மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன் கோவில் ஆடிக்குண்டம் விழாவில், குதிரை வாகனத்தில் அம்மன் திருவீதி உலாவும், பரிவேட்டையும் நடந்தது. மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன் கோவில் ஆடிக்குண்டம் விழா நடந்து வருகிறது. குண்டம் இறங்கிய அடுத்த நாள் பூ பல்லக்கில் அம்மன் திருவீதி உலா நடந்தது. இரண்டாம் நாள், பச்சை பட்டு உடுத்திய அம்மன் குதிரை வாகனத்தில் திருவீதி உலா வந்து, பரிவேட்டை நிகழ்ச்சியில் பங்கேற்றார். அம்மனின் வாகனத்தை கட்டளைதாரர் அப்புசாமி மற்றும் அவரது உறவினர்கள் பகாசூரன் சுவாமி சிலை வரை இழுத்து வந்தனர். அப்போது கோவில் வளாகத்தில் வாணவேடிக்கை நடந்தது. பின், அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இந்நிகழ்ச்சியில் வனபத்ரகாளியம்மன் வார வழிபாடு மன்றத்தினர், பரம்பரை அரங்காவலர் வசந்தா மற்றும் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். பின், அன்னதானம் வழங்கப்பட்டது.