வருவாய் என வழைத்தால் வாரா திருப்பதுவோ? தருவாய் வரமென்றால் தாய்மறுக்கும் பழக்கமுண்டோ? குருவாய் வழிநடத்திக் குலம்காக்கும் கருப்பண்ணனே வருவாய் எனவழைத்தோம் வந்தருள வேண்டுமய்யா!
என்ன கருப்பையா? எழுந்துவரத் தாமதமேன்? சின்னவர்கள் பிழை செய்தால் மன்னவன் நீ வெறுப்பதுவோ? அன்னைமனம் கொண்டவனே! ஆதரிக்கும் கருப்பண்ணனே! வண்ணமலர் மாலையுடன் வருவாய் இது சமயம்.
தராதரம் பார்ப்பாயோ? தாங்கும் பொறுப்பிலையோ? வராமல் விடுவோமா? வரவழைக்கத் தெரியாதா சிறாவயலைச் சேர்ந்தவர்கள் சேர்ந்துன்னைக் கூவுகிறோம் கறாராய் நடக்காமல் காப்பாற்ற வேண்டுமய்யா