எரியும் நெருப்பில் இறங்கும் பெண்கள்: விடிய விடிய நடந்த தீமிதி திருவிழா!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
06ஆக 2015 12:08
திருநெல்வேலி:சங்கரன்கோவில் அருகே மாவிலியூத்து அக்கினி மாலையம்மன் கோயிலில் ஏராளமான பெண்கள் 108 முறை எரியும் நெருப்பில் இறங்கினர்.திருநெல்வேலி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ளது மாவிலியூத்து கிராமம். இங்குள்ள அக்கினிமாலையம்மன் கோயில் விழா பிரசித்தி பெற்றது. ஆண்டுதோறும் ஆடி மாதம் நடக்கும் தீக்குண்டம் விழாவில் மரக்கட்டைகளை தீயிட்டு அதில் பெண்கள் ஏறிச்செல்லும் நிகழ்வு மெய்சிலிர்க்கச்செய்கிறது. வழக்கமான தீமிதி விழாக்களில் கட்டைகளை தீயிட்டு சாம்பலான கங்குகளில் மிதிப்பார்கள். ஆனால் மாவிலியூத்து கோவில் விழாவில் கட்டைகளை அடுக்கி எரியும் தீ ஜூவாலையில் ஏறுகிறார்கள். 1800களில் பிரிட்டிஷ் ஆட்சியின் போது நடந்த போர் ஒன்றில் மாவிலியூத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர் பங்கேற்று இறந்தார். கணவன் இறந்ததால் அவரது மனைவி, கணவர் இறந்த துக்கம் தாளாமல் உடன்கட்டை ஏறி உயிரை மாய்த்துள்ளார். அந்த பெண்ணை பின்னர் அக்கினி மாலையம்மனாக கோயில் எழுப்பி வழிபடத் துவங்கினர். அந்த பெண் தெய்வத்தின் கொடை விழாவில் பெண்கள், தீக்குண்டம் மிதித்து நேர்த்திக்கடனை செலுத்துகின்றனர். இதற்காக சங்கரன்கோவிலையடுத்துள்ள வன்னிக்கோனேந்தல், குருக்கள்பட்டி உள்ளிட்ட சுற்றுவட்டார ஏழு கிராம மக்கள் 48 நாட்கள் விரதம் இருந்து விழாவில் பங்கேற்கின்றனர். தீயில் இறங்கும் பெண்கள் இரவு 12 மணி முதல் அதிகாலை 3 மணி வரையிலும் தீக்குண்டத்தில் இறங்குகின்றனர். ஒரே பெண்மணி 108 தடவைகள் தீயில் இறங்குகின்றனர். இதனை காண பல்வேறு பகுதிகளில் இருந்தும் மக்கள் கூடியிருந்தனர்.