பதிவு செய்த நாள்
17
ஆக
2015
12:08
காந்திகிராமம்: திண்டுக்கல் மாவட்ட கிராமங்களில் நாயக்கர் கால நடுகற்கள் அதிகளவில் இருப்பது காந்திகிராம பல்கலை ஆய்வில் தெரியவந்துள்ளது. பழங்காலத்தில் மக்களை பாதுகாக்க விலங்குகளோடு போராடி வீரமரணம் அடைந்தோரின் நினைவாக நடுகற்கள் நடும் பழக்கம் இருந்தது. அந்த நடுகற்களில் வீரர்களின் சாகசங்கள் இடம்பெற்றிருக்கும். தமிழகம் முழுவதும் 200 க்கும் மேற்பட்ட இடங்களில் நடுகற்கள் கண்டறியப்பட்டுள்ளன. இவை மதுரை, திண்டுக்கல், கோவை, தர்மபுரி, வேலுார் ஆகிய மாவட்டங்களில் அதிகளவில் காணப்படுகின்றன. திண்டுக்கல் மாவட்டத்தில் பழநி, கொடைக்கானல், தாண்டிக்குடி, கொழிஞ்சிப்பட்டி, அணைப்பட்டி, சித்தர்கள்நத்தம், பெரியகோட்டை, கள்ளிமந்தையம் பகுதிகளில் காணப்படுகின்றன. காந்திகிராம பல்கலை தமிழ் பேராசிரியர் முத்தையா கிராமங்களில் ஆய்வு மேற்கொண்டு வருகிறார். ஆய்வில், நடுகற்கள் பெரும்பாலும் 13ம் நுாற்றாண்டுக்கு பின் நாயக்கர்கள் காலத்தை சேர்ந்தவையாக உள்ளன. பேராசிரியர் முத்தையா கூறியதாவது: சங்க காலத்தில் இருந்தே வீரர்களின் நினைவாக நடுகற்கள் நடப்பட்டு வந்துள்ளன. இந்த கற்கள் வீரருடைய புகழை பேசுவதற்காக எழுப்பப்பட்டவை. இதில் வீரரின் விபரம், யாருக்காக சண்டை செய்தார் போன்ற விபரங்கள் இருக்கும். ஊருக்குள் புகுந்து சேதம் ஏற்படுத்திய புலிகள், பன்றிகளுடன் சண்டையிட்டு இறந்தோரின் நினைவாக அதிகளவில் நடுகற்கள் நடப்பட்டுள்ளன. மலைப்பகுதி போன்ற சில இடங்களில் 2 கி.மீ., உயரத்தில் கூட கற்கள் உள்ளன,