பதிவு செய்த நாள்
20
ஆக
2015
11:08
பல்லாவரம்: பல்லாவரம், கங்கையம்மன் கோவிலை, பொதுமக்கள் மற்றும் போலீசார் முன்னிலையில், இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் கைப்பற்றி, உண்டியலை நிறுவி சீல் வைத்தனர். பல்லாவரம், தர்கா சாலையில், பழமையான கங்கையம்மன் கோவில் உள்ளது. அந்தக் கோவிலை நிர்வகிப்பதில், இரு தரப்பினரிடையே போட்டி நிலவி வந்தது. அதுகுறித்து, இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளுக்கு புகார் வந்ததை அடுத்து, 2007ல், கங்கையம்மன் கோவிலை கைப்பற்றுமாறு, இந்து சமய அறநிலையத்துறைக்கு, கோர்ட் உத்தரவிட்டது. அப்போது, அந்த தீர்ப்பை எதிர்த்து, ஒரு தரப்பினர் வழக்கு தொடர்ந்தனர். அந்த வழக்கு நிராகரிக்கப்பட்டது. இருப்பினும், அக்கோவிலை ஒப்படைக்க, ஒரு தரப்பினர் தொடர்ந்து மறுத்து வந்தனர். இந்த நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன், திருநீர்மலை ரங்கநாத பெருமாள் கோவிலின் செயல் அலுவலர், கங்கையம்மன் கோவிலின் தக்காராக நியமிக்கப்பட்டார். இதை அடுத்து, இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள், நேற்று காலை, போலீஸ் பாதுகாப்புடன் சென்று, பொதுமக்கள் முன்னிலையில், கங்கையம்மன் கோவிலை கைப்பற்றினர். பின், புதிதாக உண்டியலை நிறுவி, சீல் வைத்தனர்.