பதிவு செய்த நாள்
22
ஆக
2015
12:08
மோகனூர்: பாலாம்பிகை சமேத வஜ்ரபாணீஸ்வரர் கோவில் கும்பாபிஷேக விழா கோலாகலமாக நடந்தது. மோகனூர் அடுத்த, ஒருவந்தூரில் பாலாம்பிகை சமேத வஜ்ரபாணீஸ்வரர் கோவில் உள்ளது. பழமையான இக்கோவிலில், திருப்பணி மிகுந்த பொருட்செலவில் மேற்கொள்ளப்பட்டது. திருப்பணிகள் அனைத்தும் முடிந்த நிலையில், நேற்று கும்பாபிஷேக விழா கோலாகலமாக நடந்தது. அதை தொடர்ந்து விநாயகர் வழிபாட்டுடன் நிகழ்ச்சி துவங்கப்பட்டது. மேலும், புண்யாகம், மகா கணபதி ஹோமம், வாஸ்து பூஜை நடந்தது. அனைத்து கோபுரங்களுக்கும் கலசம் வைக்கப்பட்டு, முதல்கால யாக பூஜை, பூர்ணாகுதி, தீபாராதனை உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தது. நேற்று அதிகாலை, 5 மணிக்கு விநாயகர் வழிபாடு, புண்யாகம், நாடி சந்தானம், கடம் புறப்பாடு உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தது. தொடர்ந்து, காலை, 8.15 மணிக்கு, பாலாம்பிகை சமேத வஜ்ரபாணீஸ்வரர், விநாயகர் ஆகிய தெய்வங்களுக்கு மகா கும்பாபிஷேகம் கோலாகலமாக நடந்தது. அதையடுத்து சிறப்பு பூஜை, ஸ்வாமி தரிசனம் நடந்தது. ஸ்வாமி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஒருவந்தூர் பஞ்சாயத்து தலைவர் வக்கீல் செல்லராசாமணி, பி.ஏ.சி.பி., தலைவர் பாலசுப்ரமணியம், கோவில் நிர்வாகிகள், பக்தர்கள் என, ஏராளமானோர் பங்கேற்று ஸ்வாமியை வழிபட்டனர். விழாவில் பங்கேற்ற பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள், ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.