பதிவு செய்த நாள்
24
ஆக
2015
11:08
ஆர்.கே.பேட்டை: ஆர்.கே.பேட்டை அடுத்த, அம்மையார்குப்பம் கிராமத்தில் உள்ள மருவத்துாரம்மன் கோவிலில், நேற்று ஆடிப்பூரம் விழா கொண்டாடப்பட்டது. காலை, 6:00 மணிக்கு கொடியேற்றத்துடன் விழா துவங்கியது. 7:00 மணிக்கு, அம்மனுக்கு, சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடத்தப்பட்டது. அதை தொடர்ந்து 9:00 மணிக்கு, பாலாபுரம் சாலையில் உள்ள திரவுபதியம்மன் கோவில் வளாகத்தில் இருந்து, 1,008 கஞ்சி கலயங்களை, ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றத்தினர் ஊர்வலமாக சுமந்து வந்தனர். இந்த ஊர்வலம், அங்காளம்மன் கோவில், பொன்னியம்மன் கோவில்களை சுற்றிக்கொண்டு, பிற்பகல் 12:00 மணிக்கு, ஆர்.கே.பேட்டை சாலையில் உள்ள மருவத்துாரம்மன் கோவிலை வந்தடைந்தது. அம்மனுக்கு படைக்கப்பட்ட கஞ்சி, பக்தர்களுக்கு வழங்கப்பட்டது.