பதிவு செய்த நாள்
26
ஆக
2015
11:08
உத்திரமேரூர்: எடமச்சியில், பராமரிப்பின்றி சிதிலமடைந்துள்ள, சவுமிய நாராயண பெருமாள் கோவிலை சீரமைக்க, பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். உத்திரமேரூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட எடமச்சி கிராமத்தில், இந்து அறநிலைய துறைக்குச் சொந்தமான, பழமை வாய்ந்த சவுமிய நாராயண பெருமாள் கோவில் உள்ளது. இக்கோவில், சில ஆண்டுகளாக பராமரிப்பின்றி உள்ளதால், கோவிலின் சுற்றுச்சுவர், மடப்பள்ளி கட்டடம் இடிந்து, கோவில் பாழடைந்த நிலையில் காணப்படுகிறது. இதுகுறித்து, அப்பகுதி பக்தர்கள் கூறுகையில், ‘15 ஆண்டுகளுக்கு முன், இக்கோவிலில் தினமும் ஒருகால பூஜை நடந்து வந்தது. கோவில் சிதிலமடைந்து உள்ளதால், தற்போது, விசேஷ நாட்களில் மட்டும் பூஜைகள் நடக்கின்றன. இக்கோவிலை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர். இந்து அறநிலைய துறை செயல் அலுவலர் கேசவராஜ் கூறுகையில், ‘‘கோவிலை புனரமைத்து, தினமும் பூஜைகள் நடத்த நடவடிக்கை எடுக்கப்படும்,’’ என்றார்.