திருப்புவனம்: திருப்புவனம் அருகே அச்சங்குளம் கிராமத்தில் புரவி எடுப்பு திருவிழா நடந்தது.கிராமங்களில் உள்ள பொதுமக்கள், வயல்வெளிகள் உள்ளிட்டவற்றை எல்லை காவல் தெய்வமான அய்யனார் காப்பதாக ஐதீகம். காவல் தெய்வமான அய்யனார் விவசாயம் செழிக்கவும் பொதுமக்கள் நோய் நொடி இன்றி பாதுகாப்பதாகவும் கிராமமக்களால் நம்பப்படுகிறது. அய்யனாருக்கு ஒவ்வொரு வருடமும் புதிதாக குதிரை செய்து திருவிழா நடத்துவது வழக்கம். அச்சங்குளம் கிராம காவல் தெய்வமான அய்யனாருக்கு பல ஆண்டுகளுக்கு பிறகு அய்யனார் கோயிலுக்கு புரவி எடுப்பு திருவிழா நடந்தது. அழகுடையான் கிராம வேளார் தெருவில் இருந்து கிராமமக்கள் புரவிகளை சுமந்து ஊர்வலமாக வலம் வந்தனர். முன்னதாக புரவிகளுக்கு புத்தம்புது வேட்டி, துண்டு அணிவித்து சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. குழந்தை வரம் வேண்டி விரதம் இருந்த பக்தர்கள் பொம்மை செய்து அய்யனாருக்கு நேர்த்தி கடன் செலுத்தினர். அழகுடையான் கிராமத்தில் இருந்து ஊர்வலமாக புரவிகளை எடுத்து வந்து அய்யனார் கோயிலில் இறக்கி வைத்தனர். புரவி எடுப்பு திருவிழாவை முன்னிட்டு அன்னதானம், கலைநிகழ்ச்சிகள் நடந்தன.