பதிவு செய்த நாள்
02
செப்
2015
12:09
திருப்பூர்: "வனத்துக்குள் திருப்பூர் திட்டத்தின் கீழ், அறநிலையத்துறைக்கு சொந்தமான நிலங்களில், மரக்கன்றுகள் நடும் பணிகள் இன்று துவங்குகின்றன. முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் கனவை நிறைவேற்றும் வகையில், திருப்பூர் மாவட்டத்தில் ஒரு லட்சம் மரக்கன்றுகள் நட்டு, பராமரிக்கும் "வனத்துக்குள் திருப்பூர் திட்டம், கடந்த, 23ல் துவக்கப்பட்டது. வெற்றி அமைப்பின் இம் முயற்சியில், "தினமலர் நாளிதழும் கரம் கோர்த்துள்ளது. பொதுமக்கள், சேவை அமைப்புகள், தொழில் நிறுவனங்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள் இதில் இணைந்து மரக்கன்று நடும் பணியில் தீவிரம் காட்டி வருகின்றனர். இதில், இணைய அரசு துறைகளும் ஆர்வம் காட்டி வருகின்றன. அறநிலையத்துறை சார்பில், கோவில்கள் மற்றும் அதற்கு சொந்தமான நிலங்களில், இலுப்பை, வேம்பு, மகா கனி, நாவல், பூவரசு ஆகிய மரக்கன்றுகள் நடப்பட உள்ளன. திட்டத்தின் துவக்கமாக, நல்லூர் விஸ்வேஸ்வரசுவாமி கோவில், சுப்ரமணிய சுவாமி கோவிலுக்கு சொந்தமான, விஜயாபுரம் பகுதியிலுள்ள மூன்று ஏக்கர் நிலத்தில், மரக்கன்றுகள் நடும் பணி இன்று காலை 9:30 மணிக்கு நடக்கிறது. அறநிலையத்துறை இணை ஆணையர் இளம்பரிதி, உதவி ஆணையர் ஆனந்த் மற்றும் செயல் அலுவலர்கள் பங்கேற்கின்றனர். இந்த நிலம், தனியார் ஆக்கிரமிப்பில் இருந்து இரண்டு ஆண்டுக்கு முன்பு மீட்கப்பட்டதாகும். இங்கு, 150 மரக்கன்றுகள் நடுவதற்கான, குழிகள் அமைக்கப்பட்டுள்ளன. மரக்கன்றுகள் நட்டு, இரண்டு ஆண்டுகள் வெற்றி அமைப்பின் மூலம், தண்ணீர் விட்டு பராமரிக்கப்பட உள்ளது.