பதிவு செய்த நாள்
07
செப்
2015
12:09
கிபுட்ஸ் பர்காய் (இஸ்ரேல்): மேற்கு ஆசியாவை சேர்ந்த, இஸ்ரேலில், ‘கிருஷ்ண ஜெயந்தி’ விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. யூத நாடான இஸ்ரேலில், ஹரிஷ் நகருக்கு அருகே உள்ள சிறிய கிராமம், கிபுட்ஸ் பர்காய். பல்வேறு சமூகத்தினர் ஒற்றுமையுடன் வசிக்கும் இக்கிராமத்தில், பிரதான தொழிலாக விவசாயம் உள்ளது. இங்கு, கிருஷ்ணரை வழிபடும் பல குடும்பங்கள் உள்ளன. இவர்கள், இந்தியாவில், உத்தரபிரதேச மாநிலத்தில், கிருஷ்ணர் அவதரித்த, மதுரா, பிருந்தாவன் உள்ளிட்ட தலங்களுக்கு வந்து, பக்தி மார்க்கத்தை கற்றுக் கொண்டு, தங்கள் வாரிசுகளுக்கும் உபதேசித்து வருகின்றனர். இக்குடும்பத்தினரை, ‘ஹரே கிருஷ்ணாஸ்’ என்று உள்ளூர் மக்கள் அழைக்கின்றனர். நேற்று, கிபுட்ஸ் பர்காயில், கிருஷ்ணர் பிறந்த நாளையொட்டி, ‘கோகுலாஷ்டமி’ விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. இசைக் கச்சேரி, கிருஷ்ணர் வரலாற்று நாடகம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. இவ்விழாவைக் காண, ஜெருசலம் உள்ளிட்ட தொலை துார நகரங்களில் இருந்து ஏராளமானோர் வந்திருந்தனர்.