பதிவு செய்த நாள்
08
செப்
2015
12:09
அன்னுார்:பகவான் நாமத்தை சொல்வதற்கே, நாம் புண்ணியம் செய்திருக்க வேண்டும், என்று, அன்னுாரில் நடந்த ஆன்மிக சொற்பொழிவில், திருச்சி கல்யாணராமன் பேசினார். அன்னுார் கரிவரதராஜப் பெருமாள் கோவிலில், 69ம் ஆண்டு கிருஷ்ண ஜெயந்தி விழா நடந்து வருகிறது. இதையொட்டி, மகாபாரத தொடர் சொற்பொழிவு துவக்க விழா நேற்று நடந்தது. இதில், காஞ்சி காமகோடி பீட வித்வானும், ஆன்மிக சொற்பொழிவாளருமான திருச்சி கல்யாண ராமன் பேசியதாவது:பகவான் நாமத்தை சொல்வதற்கு புண்ணியம் செய்திருக்க வேண்டும். தங்கம், வைரம், வைடூரியம் அணிந்த பசுவை, வேத பிராமணனுக்கு தானமாக கொடுத்தால், என்ன புண்ணியம் கிடைக்குமோ, அந்த புண்ணியம் மகாபாரத கதையை கேட்டாலே கிடைக்கும். தீய விஷயங்கள், நாம் இருக்கும் இடத்துக்கே வரும். உயர்ந்த விஷயங்களை நாம் தேடிச் சென்று தான் பெற வேண்டும். பக்தி இல்லாத கெட்டிக்காரத்தனத்தால் பயனில்லை. மக்கள், உள்ளூர் கோவில்களை விட்டு, வெளியூர் கோவில்களுக்கு செல்கின்றனர். உடலில் தெம்பு இருக்கும்போதே ஆன்மிக யாத்திரை செல்ல வேண்டும். இந்து மதம் பலவீனப்பட்டுள்ளது. அனைத்து சிவாலயங்களையும் தரிசித்த புண்ணியம், சிதம்பரம் கோவிலை தரிசித்தாலே கிடைக்கும்.திருவாரூரில் பிறந்தால் முக்தி; தில்லை நடராசரை தரிசித்தால் புத்தி; அருணாச்சலேஸ்வரரை நினைத்தாலே முக்தி; காசியில் இறந்தால் முக்தி.இவ்வாறு, திருச்சி கல்யாணராமன் பேசினார்.மகாபாரத தொடர் சொற்பொழிவு வரும், 14ம் தேதி வரை தினமும் மாலை, 6:30 மணி முதல் இரவு, 8:30 மணி வரை நடக்கிறது. 15ம் தேதி காலை, 10:00 மணிக்கு நிறைவு நாள் சொற்பொழிவு நடக்கிறது. ஏற்பாடுகளை ஸ்ரீ ராமானுஜ பக்தஜன பேரவையினர் செய்துள்ளனர்.