பதிவு செய்த நாள்
15
செப்
2015
11:09
அவிநாசி: விநாயகர் சதுர்த்தி விழா, நாளை மறுநாள் கொண்டாடப்படும் நிலையில், சிலை தயாரிப்பு பணிகள் முடியும் தருவாயில் உள்ளன. வரும் 17ம் தேதி, விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, இந்து முன்னணி உள்ளிட்ட பல்வேறு இந்து இயக்கங்கள் சார்பில், ஆயிரக்கணக்கான சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட உள்ளன. அதற்காக அலகுமலை, பவானிசாகர் உள்ளிட்ட இடங்களில், இந்து முன்னணி சார்பில், விநாயகர் சிலைகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. இருப்பினும், பிற அமைப்புகள் சார்பில் வைக்கப்படும் விநாயகர் சிலைகள், அவிநாசி அருகே காசிகவுண்டன்புதூரில், கடந்த ஒரு மாதமாக தயாரிக்கப்பட்டு வருகிறது. 4 அடி முதல், 15 அடி வரை, விநாயகர் சிலைகள் பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்டு வருகின்றன. லட்சுமி நரசிம்ம விநாயகர், சிவபார்வதி விநாயகர், நர்த்தன விநாயகர் என, விதவிதமான வடிவத்தில், விநாயர் சிலை தயாரிக்கும் பணி, இறுதி கட்டத்தில் உள்ளது. சிலை தயாரிப்பாளர் ஆனந்தன் கூறுகையில், ""விழா நெருங்கிவிட்டதால், இரவு பகல் முழுவதும் வேலை செய்கிறோம். முற்றிலும், குச்சிக்கிழங்கு மாவு கொண்டு சிலை தயாரிக்கப்பட்டு, தண்ணீரில் கரையும் வண்ணங்களை மட்டுமே பயன்படுத்துகிறோம். இச்சிலைகள் சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தாது, என்றார்.